நடிகர் தனுஷ் நடிப்பில் வருகிற 20ம் தேதி வெளியாக உள்ள படம் குபேரா. இந்த படத்தை தெலுங்கு பட இயக்குனர் சேகர் கம்முலா டைரக்ட் செய்திருக்கிறார். இந்த படத்தில் நடிகர் தனுஷ் நாயகனாகவும் நடிகை ராஷ்மிகா மந்தனா நாயகியாகவும் நடித்திருக்கின்றனர். தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
இந்த படம் 3 மணி நேரம் 15 நிமிடங்கள் ஓடக்கூடிய மிக நீளமான படமாக உள்ளது. அதனால் தியேட்டர்களில் 4 காட்சிகள் திரையிடுவதே சிரமம் என்ற நிலை தியேட்டர் உரிமையாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் வருகிற 20ம் தேதி முதல் நாளில் காலை 9 மணி சிறப்பு காட்சியை அரசு அனுமதித்தாலும் தியேட்டர்களில் திரையிடுவதில் சிக்கல் நீடிக்கிறது.
குபேரா படத்தின் கதையின் படி பிச்சைக்காரர் கேரக்டரில் நடிகர் தனுஷ் நடித்திருக்கிறார். பெரிய ஊழல்வாதிகள் தொழில் அதிபர்கள் அரசியல்வாதிகளுக்கு சார்டர்ட் அக்கவுண்டன்ட் ஆக இருக்கும் நாகர்ஜூன் கணக்கில் வராத பல நூறு கோடி கருப்பு பணத்தை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதுதான் கதை என்று சொல்லப்படுகிறது.
இதற்காக நடிகர் தனுஷ் உட்பட ரோட்டோர பிச்சைக்காரர்களை பிடித்து அவர்களை போலியாக தொழிலதிபர்களாக மாற்றி, சுவிஸ் பேங்க்கில் கணக்கு துவங்கி, அந்த கருப்பு பணத்தை எல்லாம் ஆட்டைய போடுவதுதான் குபேரா படத்தின் மையக்கதை என்று சொல்லப்படுகிறது. இது நடிகர் பாண்டியராஜன் நடித்த படத்தின் ஒரு காட்சியை நினைவூட்டுவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
அதாவது கடந்த 1988ம் ஆண்டில் வெளியான படம் ஊரத் தெரிஞ்சுகிட்டேன். பாண்டியராஜன் கதாநாயகனாக நடித்த இந்த படத்தில் பல்லவி செந்தில் ஜெய்சங்கர் மலேசியா வாசுதேவன் கிஷ்மு பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தில் ஒரு காட்சியில் நடிகர் பாண்டியராஜன், செந்திலுடன் சேர்ந்துக்கொண்டு ரோட்டோரத்தில் திரியும் பைத்தியங்கள், பிச்சைக்காரர்களை எல்லாம் பிடித்து வருவார்.
பிறகு அவர்களை எல்லாம் குளிக்க வைத்து, புதிய டிரஸ் மாட்டிவிட்டு 2 ஆயிரம் 4 ஆயிரம் 6 ஆயிரம் என ஏலம் விடுவது போல் சொல்லி பிஸ்கட் கொடுத்து, பணக்காரர்களை போல ஏலத்தில் பங்கேற்க வைத்து மோசடி செய்வார். அந்த காமெடி காட்சியை போல, பிச்சைக்காரர்களை பணக்காரர்களாக குபேரா படத்தில் சேகர் கம்முலா நடிக்க செய்திருப்பது அந்த பட காமெடியை ரசிகர்களுக்கு நினைவுபடுத்துவதாக கூறப்படுகிறது.





