முன்னாள் நடிகர் இன்றைய தமிழக முதல்வர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவில் டைரக்டராக அறிமுகமான முதல் படம் சிக்மா. லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்த இந்த படம் கடந்த 2ம் தேதி காந்தி ஜெயந்தி தினத்தன்று வெளியானது. இந்த படம் குறித்த பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது.
ஆனால் சிக்மா படம் வெளியான பிறகு படம் பார்த்த ரசிகர்கள் பலத்த ஏமாற்றத்தை சந்தித்தனர். ஏனெனில் வழக்கம் போல புளித்த மாவில் அரைத்த பலகாரம் போல ஒரு பழைய கதையை பழைய பாணியில் ரசிகர்களுக்கு இயக்குனர் ஜேசன் சஞ்சய் தந்திருப்பதாக ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
படத்தில் ஒளிப்பதிவும் சண்டை காட்சிகளும் மிக சிறப்பாக இருக்கிறது என்றால் டெக்னிக்கலாக அதை ரசிக்க முடிகிறது என்றால் அது ஸ்டண்ட் மாஸ்டருக்கும் கேமராமேனுக்கும் கிடைக்கிற தனி மரியாதையாக மட்டுமே இருக்குமே தவிர இதில் இயக்குனருக்கு பெரிய பங்கு எங்கே இருக்கிறது என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.
நடிகர் விஜய் மகன் என்ற அடையாளத்தை கடந்து வெளிநாட்டில் சினிமா பயிற்சி பெற்றவர், சில குறும்படங்களையும் இயக்கியவர் என்ற முறையில் ஜேசன் சஞ்சய் ஒரு அசத்தலான கதையில் தன் இயக்கத்தை தந்திருக்கலாம். தேர்ந்தெடுக்க கதையே தவறாக உள்ளதால் அந்த படமும் தவறானதாக போய்விட்டது என்று திரை விமர்சகர் ப்ளு சட்டை மாறனும் கூறியிருக்கிறார்.
மொத ராத்திரி சிறை தாய்கிழவி போன்ற சின்ன பட்ஜெட் படங்களில் வெற்றிக்கு காரணம் அந்த படத்தின் இயல்பான கதைக்களம் மட்டும்தான். அந்த கதையை தனித்தன்மையுடன் வெளிப்படுத்திய கதாபாத்திரங்கள் தான். தொழில்நுட்ப அறிவை காட்ட வேண்டும் என்றால் அதற்கு ஹாலிவுட் படங்களே நிறைய வந்துக்கொண்டு இருக்கின்றன.
இதற்கிடையே வேண்டும் என்றே சிக்மா படம் குறித்து சிலர் தவறான வதந்தி பரப்புவதாக அந்த படத்தின் நாயகன் சந்தீப் கிஷன் ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஒரு நல்ல படத்தை அப்படி வதந்தி பரப்பினால் அது தவறுதான். ஆனால் ரசிகர்களிடம் வரவேற்பு பெறாத ஒரு படத்தை பற்றி வதந்தி பரப்புவது அவசியமே இல்லை என்றும் நெட்டிசன்கள் அதற்கு பதில் அளித்து வருகின்றனர்.





