ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடித்த படம் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம். இம்மாதம் 5ம் தேதி படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. குறிப்பாக நடிகர் பிரசாந்த் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்தில் நடித்திருந்தார்.
பிரபுதேவாவும், ஜெயராமும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர். மைக் மோகன் வில்லனாக நடித்திருந்தார். விஜய்க்கு ஜோடியாக சினேகாவும், மீனாட்சி சவுத்ரியும் நடித்திருந்தனர். மேலும் கனிகா, லைலா உள்ளிட்டோரும் இருந்தனர். தி கோட் படம் குறித்து ஆரம்பத்தில் எதிர்மறையான விமர்சனங்கள் இருந்தாலும் ஒரு கட்டத்துக்கு பிறகு மகன் விஜய் வில்லன் நடிப்பு பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
மேலும் இந்த படத்தில் ஏஐ தொழில்நுட்பத்தில் விஜயகாந்த் ஒரு காட்சியில் வந்ததும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தி கோட் படத்தில் ஒரு பாடல் காட்சியில் திரிஷா குத்தாட்டம் போட்டிருந்தார். படத்தின் இறுதிக் காட்சியில் நடிகர் சிவகார்த்திகேயன், கேமியோ ரோலில் நடித்ததும் படத்துக்கு பெரிய பிளஸ் பாயிண்டாக அமைந்தது.
குறிப்பாக நடிகர் விஜய் இரட்டை வேடங்களில் நடித்திருந்த நிலையில், அதில் ஒருவர் மகன் கேரக்டரில் வில்லன் கேரக்டரில் வித்யாசமான அந்த நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அழகிய தமிழ் மகன் படத்தில் இதே போல் இரட்டை வேடத்தில் நடித்திருந்த விஜய், ஒரு கேரக்டரில் வில்லனாக நடித்திருந்தார். அந்த படத்தில் வில்லன் நடிப்பு அவ்வளவாக எடுபடாத நிலையில், தி கோட் படத்தில் விஜய் மாறுபட்ட வில்லன் நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை அசத்தி விட்டார்.
தி கோட் படம் வெளியான 18 நாட்களில், 440 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ள நிலையில், விரைவில் 500 கோடி ரூபாய் நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தி கோட் படம் வருகிற அக்டோபர் 10ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று தகவல் வெளிவந்துள்ளது.
அதே நாளில்தான் நடிகர் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படம் ரிலீஸ் ஆகிறது. ஏற்கனவே ரஜினிக்கும் விஜய்க்கும் மறைமுகப் போர் என்ற நிலையில், ரஜினி நடித்த படம் ரிலீஸ் ஆகும் அதே நாளில், நெட்பிளிக்ஸில் விஜய் நடித்த தி கோட் படம் வெளியாவது போட்டியாக இருக்குமா என்றும் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





