தமிழ் சினிமாவில் இன்று பரபரப்பாக பேசப்படும் ஒரு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தான். கைதி, விக்ரம் படங்களை தொடர்ந்து இப்போது அவரது இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதையடுத்து ரஜினி 171 படத்தை இயக்க இருக்கிறார். அதைத் தொடர்ந்து விக்ரம் 2ம் பாகத்தையும் இயக்க திட்டமிட்டுள்ளார்.
மாநகரம், கைதி படங்களை அடுத்து, விக்ரம் படத்தில் உலகநாயகன் கமலுக்கே ஒரு மாஸ் கம்பேக் கொடுத்தவர்தான் லோகேஷ் கனகராஜ். அதனால் பீஸ்ட், வாாிசு படங்கள் பெரிய வெற்றி பெறாத நிலையில், லியோ படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி, நடிகர் விஜயும் மிகப் பெரிய வெற்றிப்படமாக அமைய எதிர்பார்த்து காத்திருக்கிறார்.
இப்படி தொடர்ந்து கமல், விஜய், ரஜினி என மெகா ஸ்டார்களை வைத்து படம் இயக்குகிற, பெரிய வெற்றி படங்களை கொடுக்கிற இயக்குநர் படத்தில் நடிக்க, நடிகர்களுக்குள் பயங்கர போட்டியே ஏற்படும். அவரது படத்தை தயாரிக்க தயாரிப்பு நிறுவனங்களும் தானாகவே முன்வரும். அதே போல், அந்த இயக்குநரின் அடுத்த படம் குறித்த ஆர்வமும், ரசிகர்கள் மத்தியில் பலமடங்கு அதிகரித்தே காணப்படும்.
இதற்கிடையில், ஒரு சுவாரசியமான தகவல் இப்போது தெரிய வந்துள்ளது. விக்ரம் படம் பார்த்த தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி, இயக்குநர் லோகேஷ் கனகராஜை போனில் அழைத்து பேசி இருக்கிறார். அப்போது, விக்ரம் படம் மிக பிரமாதமாக இருக்கிறது. நான் என் சினிமா கேரியரில் இதுவரை இப்படி ஒரு படத்தை பார்த்ததில்லை என்று லோகேஷ் கனகராஜை பாராட்டி இருக்கிறார். அப்போது, நடிகர் சிரஞ்சீவி, என் பையன் ராம்சரணை வைத்து ஒரு படம் பண்ணுங்கள் என்றும், அவரிடம் கூறி இருக்கிறார்.
அப்போது அவரிடம் லோகேஷ் கனகராஜ், நிச்சயமாக சார், எதிர்காலத்தில் ராம்சரணை வைத்து கண்டிப்பாக படம் பண்ணுகிறேன் என்றும் கூறி இருக்கிறார். தெலுங்கில் மிகப்பெரிய நடிகரான சிரஞ்சீவி, அவரது மகனுக்காக வாய்ப்பு கேட்டிருப்பதால், நிச்சயம் லோகேஷ் அதை நிறைவேற்றாமல் விடமாட்டார்.
அதுவும் லோகேஷ் கனகராஜ், நடிகர் சிரஞ்சீவியின் மிகப்பெரிய ரசிகராக உள்ள நிலையில், லியோ படத்தில் ராம் சரண் ஓரிரு காட்சிகளில் வர வாய்ப்புள்ளது. அல்லது, ராம்சரணை ஹீரோவாக வைத்து முழு படமாக தரவும் லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டிருக்கலாம் என்ற தகவல் பரவி வருகிறது. ஒருவேளை பயங்கர சஸ்பென்ஸ்சாக லியோ படத்திலேயே ராம்சரண் வந்திருப்பாரோ, என்ற பரபரப்பும் தெலுங்கு சினிமா ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.





