கடந்தாண்டு மே மாதம் 1ம் தேதி சூர்யா நடித்த ரெட்ரோ படம் வெளியான நிலையில் சரியாக ஓராண்டு 2 வாரங்கள் கழிந்த நிலையில் நடிகர் சூர்யா நடிப்பில் நாளை கருப்பு படம் வெளியாகிறது. சூர்யா ரசிகர்கள் மத்தியில் இந்த படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
தமிழக அரசு கருப்பு படத்துக்கு சிறப்பு காட்சி அனுமதி தந்துள்ளது. அதன்படி காலை 9 மணிக்கு சிறப்பு காட்சியுடன் கருப்பு படம் ரிலீஸாகிறது. நாளை மட்டும் 5 காட்சிகள் திரையிட்டுக்கொள்ள அரசு அனுமதி கிடைத்துள்ளது. ஆனால் அதிகாலை 4 மணி அல்லது 6 மணி என வழக்கத்தை மாற்றாமல் கடந்த ஆண்டுகளை போல காலை 9 மணி சிறப்பு காட்சி அனுமதிக்கப்பட்டுள்ளது.
கருப்பு படத்தில் கதாநாயகியாக திரிஷா நடித்திருக்கிறார். இந்த படத்தில் அவருக்கு பின்னணி குரல் கொடுக்கப்பட்டுள்ளது. டப்பிங் ஆர்ட்டிஸ்ட் கிருத்திகா நெல்சன் என்பவர் இந்த படத்தில் திரிஷாவுக்கு பின்னணி பேசியிருக்கிறார். இவர்தான் குந்தவை கேரக்டரில் திரிஷா நடித்த பொன்னியின் செல்வன் படத்திலும் திரிஷாவுக்கு குரல் கொடுத்தவர்.
ஆனால் சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த டப்பிங்கில் கருப்பு படத்தில் திரிஷாவுக்கு பாடகி சின்மயி பின்னணி குரல் கொடுத்துள்ளார். அவருக்கு தமிழ்நாட்டில் டப்பிங் பேச டப்பிங் யூனியன் ரெட் கார்டு போட்டு தடை விதித்துள்ளது. அதனால் ஐதராபாத்தில் உள்ள டப்பிங் ஸ்டுடியோவில் திரிஷாவுக்கு சின்மயி பின்னணி பேசியிருக்கிறார்.
ஏற்கனவே லியோ படத்தில் நாயகியாக நடித்த திரிஷாவுக்கு பாடகி சின்மயிதான் குரல் கொடுத்திருந்தாா். இது விதிமுறை மீறல் என தமிழ் சினிமா டப்பிங் யூனியன் சார்பில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அதற்கான அபராதம் கட்டப்பட்டது. இப்போது மீண்டும் அதே போன்ற விவகாரம் கருப்பு படத்திலும் ஏற்பட்டுள்ளது.
நிச்சயம் கருப்பு படம் வெளியானால் அதில் நடிகை திரிஷாவுக்கு கிருத்திகா நெல்சன் பின்னணி பேசியிருந்தால் பிரச்னை இல்லை. ஒருவேளை பாடகி சின்மயி டப்பிங் பேசியிருந்தால் இதற்கு டப்பிங் யூனியன் எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாயத்தை கிளப்பும். மீண்டும் அபராதம் கட்ட வேண்டிய சூழல் கருப்பு பட நிறுவனத்துக்கு ஏற்படலாம் என்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது.





