தியேட்டர்களில் வெளியாகும் பெரும்பாலான படங்கள் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெறுவதில்லை. தமிழ் சினிமாவில் இந்த 2026ம் ஆண்டில் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை 3 மாதங்களில் 70 படங்கள் வெளியாகி உள்ளன. இதில் 5 படங்கள் கூட பெரிய வெற்றிப் படங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் ஒரு சில படங்கள் மட்டும் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் கொண்டாடப்படுகின்றன. இந்த ஆண்டில் தலைவர் தம்பி தலைமையில் தாய்கிழவி போன்ற சில படங்கள் நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றன. இப்படிப்பட்ட படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகும் போதும் அதே அளவுக்கு ரசிகர்களால் பெரிய வரவேற்பை பெறுகின்றன.
தியேட்டரில் ஒரு முறை மட்டுமே அந்த படத்தை பார்த்து ரசித்த ரசிகர்கள் ஓடிடி தளங்களில் மீண்டும் மீண்டும் அந்த படத்தை பார்த்து ரசிக்கின்றனர். அந்த வகையில் சிறை டூரிஸ்ட் ஃபேமிலி லப்பர் பந்து போர்த்தொழில் குடும்பஸ்தன் குட்நைட் பார்க்கிங் போன்ற படங்கள் பலமுறை ரசிகர்களால் ஓடிடி தளங்களில் மீண்டும் மீண்டும் விரும்பிப் பார்க்கப்பட்ட படங்களாக இருக்கின்றன. அந்த வகையில் நாளை 10ம் தேதி ஒரு வெப் சீரிஸ் உட்பட 5 படங்கள் ஓடிடி தளங்களில் ரிலீஸ் ஆகின்றன.
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் புதுமுக இயக்குனர் சிவக்குமார் முருகேசன் இயக்கிய படம் தாய்க்கிழவி. இந்த படத்தில் ராதிகா சரத்குமார் பவுனுத்தாயி கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு பெற்றது. சுமார் 75 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்தது. இந்நிலையில் தாய்க்கிழவி படம் நாளை 10ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது.
அடுத்து ஷேன் நிஹம் மற்றும் சாக்சி வைத்யா நடித்த மலையாள காதல் படம் ஹால். இந்த படம் நாளை 10ம் தேதி மனோரமா மேக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. நடிகர் முனீஸ்காந்த் மற்றும் ராஜேஷ் மாதவன் நடித்த ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவான காக்கி சர்க்கஸ் தமிழ் – மலையாள நகைச்சுவை வெப் தொடர் (ஏழு தொடர்களைக் கொண்டது) இந்த வெப் தொடர் நாளை 10ம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
அடுத்து அவினாஷ் பிரகாஷ் இயக்கத்தில் 2025ம் ஆண்டில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் நாங்கள். இந்த படம் நாளை 10ம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. அதேபோல் மலையாள இயக்குனர் ராஜீவ் மோகன் இயக்கத்தில் காமெடி கலந்த திகில் படமான கனிமங்கலம் கோவிலகரம் என்ற படம் நாளை 10ம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.





