நடிகர் விஜய் படங்கள் என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். அவரது சில படங்கள் விமர்சன ரீதியாக பலத்த எதிர்ப்பை சந்தித்தாலும் வணிக ரீதியாக பலமான லாபத்தை தந்த படங்களாக இருக்கின்றன. அதற்கு முக்கிய காரணம் அந்த படங்கள் மொக்கையான திரைக்கதையில் இருந்த போதும் விஜய் படம் என்கிற காரணத்தால் மட்டுமே அவை தியேட்டர்களில் ஓடின.
அந்த வகையில் விஜய் நடித்த பீஸ்ட் வாரிசு லியோ மற்றும் தி கோட் போன்ற பல படங்களுக்கு கலவையான விமர்சனங்கள் இருந்தும் அது விஜய் படம் என்பதாலே பல நூறு கோடி ரூபாய் வசூலை அள்ளியது. அதனால் பிளாப் படங்களாக இருந்தாலும் விஜய் நடித்தால் அது பலத்த லாபமான படங்கள் என தயாரிப்பாளர்கள் அவரை வைத்து படம் எடுக்க போட்டி போட்டனர்.
கடைசியாக விஜய் நடித்த ஜனநாயகன் படத்துக்கு ரூ. 275 கோடி வரை விஜய்க்கு சம்பளம் பேசப்பட்டதாக கூறப்பட்டது. இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 500 கோடி ரூபாய் என்கிற நிலையில் விஜய்க்கு சம்பளமே படத்தின் பட்ஜெட்டில் பாதிக்கு மேல் தரப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்த சூழலில் ஜனநாயகன் படம் பொங்கலுக்கு எதிர்பார்த்தபடி ரிலீஸ் ஆகவில்லை. சென்னை உயர்நீதிமன்றம் வரும் வழக்கில் 24ம் தேதிக்கு இந்த வழக்கின் விசாரணையை தள்ளி வைத்துள்ள நிலையில் இப்போது ஜனநாயகன் படத்தின் தயாரிப்பு நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருக்கிறது.
வருகிற திங்கள்கிழமை இந்த வழக்கு விசாரணை எடுத்துக்கொள்ளப்பட்டு சாதகமான தீர்ப்பு கிடைக்கும் பட்சத்தில் ஜனநாயகன் படம் விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது. அல்லது வேறுவிதமான அறிவிப்புகளை சுப்ரீம் கோர்ட் வெளியிடும் பட்சத்தில் இன்னும் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போகலாம். எல்லாமே சுப்ரீம் கோர்ட் தரும் பதிலில்தான் உள்ளது.
இதற்கிடையே நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் மற்றும் லியோ படங்கள் நேற்று ரி ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில் இன்று தயாரிப்பாளர் தாணு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி இயக்குனர் அட்லி இயக்கத்தில் விஜய் சமந்தா நடித்த தெறி படம் வருகிற 15ம் தேதி ரி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. நடிகர் விஜய் நடித்த படங்களில் தெறி மிக முக்கியமான ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.





