தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் விக்ரமன். அவரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் ராஜகுமாரன். விக்ரமன் இயக்கிய பல படங்களில் ராஜகுமாரன் பணி செய்திருக்கிறார். சூரியவம்சம் படத்தில் ஒரு காமெடி காட்சியில் ராஜகுமாரன் நடித்திருந்தார். தொடர்ந்து அஜீத்குமார் தேவயானி பார்த்திபன் உள்ளிட்டோர் நடித்த நீ வருவாய் என என்ற படத்தை ராஜகுமாரன் டைரக்ட் செய்தார்.
இதுதான் அவர் தமிழில் இயக்குனராக அறிமுகமான முதல் படம். தொடர்ந்து ராஜகுமாரன் விண்ணுக்கும் மண்ணுக்கும் காதலுடன் போன்ற படங்களை டைரக்ட் செய்தார். நீ வருவாய் என படம் பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில் அடுத்து அவர் இயக்கிய 2 படங்களுமே படுதோல்வியை சந்தித்தது. ஆனால் இந்த 3 படங்களிலும் நடிகை தேவயானி தான் கதாநாயகியாக நடித்திருந்தார்.
இந்த சூழ்நிலையில் தேவயானிக்கும் ராஜகுமாரனுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. தனது பெற்றோர் எதிர்ப்பை மீறி ராஜகுமாரனை தேவயானி காதல் திருமணம் செய்து கொண்டார். இந்த நட்சத்திர தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். சமீபகாலமாக இயக்குனர் ராஜகுமாரன் சில யூடியூப் சேனல்களில் நேர்காணங்களில் பங்கேற்று பேசி வருகிறார்.
ஆனால் அவர் தனது சினிமா அனுபவங்கள் குறித்து பேசாமல் குறிப்பிட்ட நடிகர்கள் இயக்குனர்கள் குறித்து கடும் விமர்சனம் செய்து பேசி வருவது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அத்துடன் ராஜகுமாரன் இயக்குனர் மட்டுமல்ல, அவர் சில படங்களில் நடித்தும் இருக்கிறார். கடுகு என்ற படத்தில் அவர் கதையின் நாயகனாக நடித்திருந்தார். கடந்த 2017ம் ஆண்டில் வெளியான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்தில் நடிகர் சந்தானம் கதாநாயகனாக அறிமுகமானார்.
அந்த படத்தில் ரயிலில் வரும் சில காமெடி காட்சிகளில் இயக்குனர் ராஜகுமாரன் காமெடி ரோலில் நடித்திருந்தார். அது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதுகுறித்து ஒரு நேர்காணலில் பங்கேற்ற இயக்குனர் ராஜகுமாரன் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் நடித்தது குறித்த தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அது பற்றி அவர் கூறியதாவது, திருமதி தமிழ் என்ற படத்தில் நடிக்க சந்தானம் மறுத்துவிட்டார். இருந்தாலும் நான் அவருடன் இந்த படத்தில் நடித்தேன். அதில் எனக்கு ஒரு பழிவாங்கும் நோக்கம் இருந்தது.
ஏனென்றால் திருமதி தமிழ் படத்தில் என் நடிப்பை பார்த்துட்டு பிரபல பத்திரிகை ஒன்றில் நடிப்பு கிலோ என்ன விலை என்று கேட்கிறார் ராஜகுமாரன் என்று விமர்சனம் செய்திருந்தனர். அப்படி அவங்க எழுதியதால் அவர்களை பழிவாங்க வேண்டும் என்பதற்காகவே, சந்தானம் படத்தில் அவருடன் நான் நடித்தேன். ஆனால் இந்த படத்தில் என் நடிப்பை எல்லோரும் பாராட்டினார்கள் என்று ராஜகுமாரன் கூறியிருக்கிறார்.





