நடிகர் அஜீத்குமார் நடித்த துணிவு படத்துக்கு பிறகு நீண்ட இடைவெளி ஏற்பட்டது. பல மாதங்களுக்கு பிறகு மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜீத்குமார் நடிப்பில் விடாமுயற்சி படப்பிடிப்பு அஜர்பைஜானில் துவங்கியது. கடந்த அக்டோபர் மாதம் துவங்கிய படப்பிடிப்பு நவம்பர் இறுதி வரை நீடித்தது.
இதற்கிடையே படத்தின் கலை இயக்குநர் மிலன் உயிரிழந்த சம்பவம், படக்குழுவை அதிர்ச்சியடைய செய்தது. பயங்கர குளிர், மணல் புயல் ஏற்பட்டதால் கடந்த சில வாரங்களுக்கு முன் சென்னை திரும்பிய படக்குழு, மீண்டும் கடந்த வாரம்தான் அஜர்பைஜானுக்கு புறப்பட்டுச் சென்றது.
வரும் பிப்ரவரி மாதம் இறுதி வரை படப்பிடிப்பை தொடர்ந்து நடத்தவும், அதன்பின்பு சென்னை திரும்பவும் படக்குழு முடிவு செய்திருந்த நிலையில், ஷூட்டிங் திடீரென நிறுத்தப்பட்டு, விடாமுயற்சி டைரக்டர் மகிழ் திருமேனி உள்ளிட்ட படக்குழுவினர் நாளை காலை சென்னை திரும்புகின்றனர்.
இதில் நடிகர் அஜீத்குமார் படக்குழுவினருடன் சென்னை திரும்புவாரா, அல்லது துபாயில் உள்ள அவரது சொந்த வீட்டுக்கு சென்று விடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனெனில் அவரது வீடும், ஷூட்டிங் நடக்கிற அஜர்பைஜான் ஏரியாவும் சில மணி நேர பயணங்களில் சென்றுவிடும் தூரம் என்பதால் அஜீத் சென்னை வருவதற்கான வாய்ப்பு குறைவு என்றே சொல்லப்படுகிறது.
இப்படி திடீரென விடாமுயற்சி படக்குழு சென்னை திரும்ப காரணம், அஜர்பைஜானில் நீடிக்கும் கடுமையான குளிர், பனிப்பொழிவு மற்றும் சூறாவளி காற்றுதான். ஷூட்டிங் ஸ்பாட்டில் வாரியடிக்கும் சூறாவளி காற்றால், படப்பிடிப்பு கருவிகள், குறிப்பாக பல லட்சம் ரூபாய் மதிப்பிலான கேமராக்கள் சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இயற்கை சீற்றத்தை சமாளிக்க முடியாமல் விடாமுயற்சி படக்குழு சென்னை திரும்ப முடிவு செய்துவிட்டது.
நாளை சென்னை திரும்பும் படக்குழு, ஆங்கில புத்தாண்டுக்கு பிறகு ஜனவரி 7ம் தேதி மீண்டும் அஜர்பைஜான் செல்ல திட்டமிட்டுள்ளது. ஆனால் அதற்குள் அங்கு இயற்கை சீற்றங்கள் குறையுமா, இதே நிலை நீடிக்குமா என தெரியவில்லை.அல்லது வேறு ஏதேனும் லொகேஷனில் படப்பிடிப்பை தொடரவும் விடாமுயற்சி படக்குழு ஆலோசிக்க வாய்ப்புள்ளது. ஆனால் விடாமுயற்சி படத்துக்கு துவக்கத்தில் இருந்தே விடாமல் பிரச்னைகள் துரத்திக்கொண்டே இருக்கின்றன.





