தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் ஒரு நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். பா ரஞ்சித் இயக்கத்தில் அட்டக்கத்தி என்ற படத்தில் அறிமுகமான ஐஸ்வர்யா ராஜேஷ் தொடர்ந்து பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார். கவர்ச்சியில்லாத குடும்பபாங்கான கேரக்டரில் அவர் நடிப்பது குறிப்பிடத்தக்கது.
காக்கா முட்டை தர்மதுரை ரம்மி கனா சாமி 2 வடசென்னை நம்ம வீட்டுப்பிள்ளை உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் கன்னடம் உள்ளிட்ட பிற மொழிகளிலும் நல்ல கதாபாத்திரங்களில் ஐஸ்வர்யா ராஜேஷ் தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார்.
தமிழக அரசின் திரைப்பட விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த வடசென்னை கனா ஆகிய படங்களுக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது இயக்குனர் பரத் தர்ஷன் இயக்கத்தில் ஓ சுகுமாரி என்ற படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார்.சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனக்கு நேர்ந்த ஒரு மோசமான அனுபவம் குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
இதுகுறித்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியதாவது, நான் மிகவும் இளம் வயதில் சினிமா வாய்ப்புகளை தேடிக் கொண்டிருந்தேன். அப்போது ஒருமுறை எனது தம்பியுடன் ஒரு படத்தில் நடிக்க ஆடிசனுக்கு சென்றிருந்தேன். அங்கு இருந்த போட்டோகிராபர் எனது தம்பியை வெளியே அமர வைத்துவிட்டு என்னை அங்கிருந்த தனி அறைக்குள் அழைத்தார்.
என்னிடம் பிகினி உடையை கொடுத்து இந்த டிரெஸ்ஸில் உன்னை பார்க்க வேண்டும். இதை அணிந்து கொண்டு வா என்று கூறினார். அந்த சமயத்தில் எனக்கு சினிமா துறையைப் பற்றிய புரிதல் பெரிதாக இல்லை. அப்படித்தான் அப்போது வாழ்க்கை சென்றது. அப்போது அந்த போட்டோகிராபர் என் உடலில் சில இடங்களில் தொட்டார். ஏதோ எனக்கு தவறாக பட்டதால் எனது தம்பியின் அனுமதியை கேட்க வேண்டும் என்று கூறிவிட்டு அந்த அறையில் இருந்து வெளியேறி விட்டேன்.
எவ்வளவு பெண்களை அவன் இந்த மாதிரி செய்தான் என்று தெரியவில்லை. நடந்ததை எனது தம்பியிடம் சொல்லும் அளவுக்கு எனக்கு அப்போது தைரியமும் இல்லை. ஒரு முறை நான் தாமதமாக வந்தேன் என்பதற்காக துணை நடிகர்கள் முன்பாக இயக்குனர் என்னை வேண்டுமென்றே திட்டினார். பல நடிகைகளுடன் ஒப்பிட்டுப் பேசினார். தவறு செய்தாலும் யாரையும் இந்த மாதிரி அசிங்கப்படுத்தக் கூடாது என்று நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அந்த நிகழ்ச்சியில் கூறியிருக்கிறார்.





