நடிகர் கே. பாக்யராஜ், இன்றும் சிறந்த கதை ஆசிரியராக இந்திய அளவில் மதிக்கப்படும் ஒரு கலைஞராக இருந்து வருகிறார். துவக்கத்தில் இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணி செய்த அவர் 16 வயதினிலே, கிழக்கு போகும் ரயில், சிவப்பு ரோஜாக்கள் போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணி செய்த கே பாக்யராஜ், சுவரில்லாத சித்திரங்கள் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
தொடர்ந்து இன்றுபோய் நாளை வா என முழுநீள காமெடி படத்தை இயக்கினார். இப்போதும் அந்த படம் ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்படும் ஒரு காமெடி படமாக இருந்து வருகிறது. ஏ கவ் மே ஏ கிஷான் ரஹ தாதா என்ற காமெடி இப்போதும், டிரண்டிங்கில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதே கதையை சில ஆண்டுகளுக்கு முன், கண்ணா லட்டு திங்க ஆசையா என்ற பெயரில் எடுக்கப்பட்டு, பாக்யராஜ் கேரக்டரில் சந்தானம் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கே பாக்யராஜ் இயக்கிய முந்தானை முடிச்சு, தூறல் நின்னு போச்சு, மௌன கீதங்கள், டார்லிங் டார்லிங் டார்லிங், விடியும் வரை காத்திரு, எங்க சின்ன ராசா, இது நம்ம ஆளு, ராசுக்குட்டி, அந்த 7 நாட்கள், சின்ன வீடு என பல படங்கள் மிகப்பெரிய ஜனரஞ்சக வெற்றிப் படங்களாக அமைந்தன.
நடிகர் கே பாக்யராஜ், சிறந்த இயக்குனர், கதை ஆசிரியர், சிறந்த எழுத்தாளர் என பன்முக தன்மை கொண்டவர். அவர் இயக்கிய சில படங்களுக்கு இசையமைத்து, பாடியும் இருக்கிறார். கவுதமி, லட்சுமி நடித்த காமெடி படம் ருத்ரா என்ற படத்தில், கவுரவ வேடத்தில் கே பாக்யராஜ் நடிப்பு வேற லெவலில் இருக்கும். இப்போது தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவராக கே பாக்யராஜ் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் கே பாக்யராஜ், எம்ஜிஆர் மீது அதிக பற்றுக்கொண்டவர். அதை ஆரம்பத்தில் இருந்தே தனது படங்களில் பல காட்சிகளில் வெளிப்படுத்தி இருப்பார். எம்ஜிஆரின் புகைப்படங்கள், திரைப்பட காட்சிகள் அவரது படத்தில் இடம்பெற்றிருப்பது வழக்கம். தன்னை எம்ஜிஆரின் விசுவாசியாக காட்டிக்கொண்ட கே பாக்யராஜை, தனது திரையுலக வாரிசு என புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அறிவித்தார். அமெரிக்காவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற எம்ஜிஆர், தன்னை பார்க்க அனுமதித்தது கே. பாக்யராஜை மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடந்த 1987ம் ஆண்டில் எம்.ஜிஆர் மறைந்தார். அவரது மறைவுக்கு பிறகு 1989ம் ஆண்டில், எம்ஜிஆர் மக்கள் முன்னேற்றக்கழகம் என்ற பெயரில் கட்சி துவங்கினார். ஆனால் பெரிய அளவில் மக்களிடம் வரவேற்பை பெறவில்லை. அதன்பிறகு கட்சி பணிகளில் அவர் ஆர்வம் காட்டாமல் விலகி விட்டார். சமீபத்தில், கோவையில் ஒரு நிகழ்ச்சியில் இதுகுறித்து பேசிய கே. பாக்யராஜ், அரசியலில் எனக்கு இரண்டு கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டன. அது தொழிலை பாதித்தது, எனது படங்களும் ஓடவில்லை. அதனால்தான் அரசியலில் ஈடுபடவில்லை என்று கூறியுள்ளார்.





