நடிகர் அஜீத்குமார் இப்போது, மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக திரிஷா, வில்லனாக ஆக்ஷன் கிங் அர்ஜூன் நடிக்கின்றனர். படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகையர் விவரம் இன்னும் வெளியாகவில்லை. அஜர்பைஜானில் 45 நாட்களாக முதல்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.
கடந்த சனிக்கிழமையன்று, அஜர்பைஜானில் இருந்து விடாமுயற்சி படக்குழு சென்னை திரும்பியுள்ளது. மீண்டும் வரும் டிசம்பர் 6ம் தேதி, விடாமுயற்சி படப்பிடிப்பை அஜர்பைஜானில் தொடர, படக்குழு புறப்பட இருக்கிறது. இந்தமுறை, முழு படப்பிடிப்பையும் ஜனவரி 30க்கும் முடித்து விட்டு திரும்ப திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அஜீத் நடிக்கும் அடுத்த படத்தை, தெலுங்கு பட தயாரிப்பு நிறுவனமா மைத்ரி மூவீ மேக்கர்ஸ் தயாரிக்க இருப்பதாக தகவல் தெரிய வந்துள்ளது. பிரபல தெலுங்கு இயக்குநர்தான் இந்த படத்தை டைரக்ட் செய்ய இருப்பதாகவும் முதலில் கூறப்பட்டது. இதனால், ஆதிக் ரவிச்சந்திரனுக்கு வாய்ப்பு இல்லை என்றும் ஒரு தகவல் பரவியது.
ஆனால், மைத்ரி மூவி மேக்கர்ஸ் படத்தை தயாரித்தாலும், ஆதிக் ரவிச்சந்திரன்தான் அந்த படத்தின் இயக்குநர் என அஜீத்குமார் திட்டவட்டமாக சொல்லி விட்டார். அதனால், இயக்குநர் மாற்றம் என்ற பேச்சுக்கே வழியில்லை என்றும் அஜீத் தரப்பில் இருந்து படத்தயாரிப்பு நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். அதனால் உறுதியாக, விடாமுயற்சிக்கு பிறகு அஜீத் குமார் நடிக்கும் அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன்தான் டைரக்ட் செய்கிறார்.
இதற்கிடையே, நடிகர் அஜீத்குமார் கடந்த சில ஆண்டுகளாக ஒரு தயாரிப்பு நிறுவனத்தில் ஒப்பந்தம் போடும்போதே அவர்கள் தயாரிப்பில் 2 அல்லது 3 படங்களுக்கு அந்த நிறுவனத்தில் நடிப்பது என்ற வழக்கத்தை வைத்திருந்தார். இது சில நேரங்களில் சாதகமாகவும், பல நேரங்களில் பாதகமாகவும் அமைந்தது. அஜீத் படங்களின் வெற்றி, தோல்விகளை பாதித்தது.
இதையடுத்து அஜீத் இப்போது தீர்மானமாக ஒரு முடிவுக்கு வந்துள்ளார். அதாவது இனிமேல் ஒரு தயாரிப்பு நிறுவனத்துக்கு ஒரு படத்தில் மட்டுமே நடிக்க சம்மதிப்பது என்பதுதான். இனிமேல் ஒரே தயாரிப்பு நிறுவனத்துக்கு இனி 2, 3 படங்களுக்கு ஒப்பந்தம் செய்வதில்லை என்று முக்கிய முடிவை அவர் எடுத்துள்ளார். இதனால், அடுத்தடுத்த பட நிறுவனங்கள் அவரது படத்தை தயாரிக்கும் வாய்ப்பு எளிதாக கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.





