இப்போதெல்லாம் முன்னணி நடிகர்களின் கால்ஷீட் கிடைப்பது, அந்த படத்தை பெரிய பட்ஜெட்டில் தயாரிப்பது, படப்பிடிப்பை குறிப்பிட்ட காலத்தில் முடிப்பது போன்ற பெரிய விஷயங்களை கூட எளிதாக செய்து விடுகின்றனர். ஆனால் படத்தை எடுத்து முடித்த பின் ரிலீஸ் செய்யும் நாளை தீர்மானிப்பது தான் பெரும்பாடாக மாறிவிடுகிறது. இதனால் படம் தயாராகி ரிலீஸ் செய்ய வேண்டிய சூழ்நிலையில், ரிலீஸ் தேதியை தள்ளி வைக்க வேண்டிய நெருக்கடியும் பட குழுவினருக்கு ஏற்படுகிறது.
நடிகர் சூர்யா நடிப்பில் உருவான படம் கங்குவா. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பெரிய அளவில் வசூலை அள்ளும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த படத்தை அக்டோபர் 10ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு இருந்தது. ஆனால் அந்த நாளில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படம் ரிலீஸ் செய்வதாக அறிவிப்பு வெளியானது.
இதையடுத்து மெய்யழகன் பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சூர்யா, தமிழ் சினிமாவின் அடையாளம், மூத்தவர் நடிகர் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படம் அக்டோபர் 10ம் தேதி ரிலீஸ் செய்யப்படுவதால் வேட்டையன் படத்துக்கு வழிவிட்டு கங்குவா படம் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று அறிவித்தார்.
அதைத் தொடர்ந்து தீபாவளிக்கு கங்குவா படம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அஜீத்குமார் நடித்த விடாமுயற்சி படம் தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்படும் என்று தகவல் பரவியதால், அப்போதும் கங்குவா ரிலீஸ் இல்லை என்ற சூழ்நிலை ஏற்பட்டது. அதன் பிறகு நவம்பர் 14ம் தேதி கங்குவா படம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக ஒரு தகவல் பரவியது.
இந்த சூழ்நிலையில் இரு தினங்களுக்கு முன் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் அர்ஜுன் விடாமுயற்சி படம் டிசம்பர் மாதம் தான் வெளியாகும் என்ற தகவலை தெரிவித்திருந்தார். அந்த படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்துள்ள அர்ஜுன் இப்படி கூறியதால், விடாமுயற்சி படம் டிசம்பர் மாதம்தான் வெளியாகிறது என்ற தகவல் உறுதியானது. இதையடுத்து விடாமுயற்சி தீபாவளி ரிலீஸ் ஆகாத பட்சத்தில் கங்குவா படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு ஆயத்தமானதாக ஒரு தகவல் வைரலானது.
இதனால் கங்குவா படம் தீபாவளிக்கு ரிலீசாகுமா, நவம்பர் 14ம் தேதி ரிலீசாகுமா என்ற பெரிய குழப்பம் ரசிகர்களுக்கு நீடித்து வரும் நிலையில் இன்று காலை 11 மணிக்கு இதுகுறித்து அப்டேட் வெளியிடுவதாக கங்குவா படக் குழு நேற்று அறிவித்துள்ளது. அதன்படி இன்று காலை 11 மணிக்கு கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி உறுதியாக அறிவிக்கப்படும் என்று தெரியவருகிறது. அதனால் சூர்யா ரசிகர்கள் இன்று காலை 11 மணிக்கு வரும் அறிவிப்பை ஆவலாக எதிர்பார்த்து உள்ளனர்.





