- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த படமும் இந்த படமும் ஒரே மாதிரி இருக்குதே? ரஜினி விஜய் நடித்த படங்கள் உள்பட...

அந்த படமும் இந்த படமும் ஒரே மாதிரி இருக்குதே? ரஜினி விஜய் நடித்த படங்கள் உள்பட பெரிய லிஸ்ட்டே இருக்குது – தமிழ் சினிமாவில் தொடரும் அவலம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் கதை திருட்டு என்பது பல ஆண்டு காலமாகவே நடந்து வருகிறது. இப்போது எந்திரன் கதை திருட்டில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரும் சிக்கி உள்ளார். ரூ. 10.11 கோடி மதிப்புள்ள அவரது அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கம் செய்திருக்கிறது. தமிழ் சினிமாவில் கதை திருட்டு மட்டுமல்ல, டைட்டில் திருட்டும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சொந்தமாக படத்துக்கு டைட்டில் கூட வைக்க திராணியற்றதாக தமிழ் சினிமா மாறி வருகிறது.

கடந்த பல ஆண்டுகளில் பல படங்கள் ஒரே மாதிரியான கதைகளில் வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அல்வா கொடுத்திருக்கின்றன. அதில் சூர்யா ஜோதிகா நடிப்பில் வசந்த் இயக்கத்தில் வெளியான படம் பூவெல்லாம் கேட்டுப்பார். இதில் காதலர்கள் இருவரும் தங்களது காதலுக்கு பெற்றோரை சம்மதிக்க வைக்க காதலி வீட்டில் காதலனும் காதலன் வீட்டில் காதலியும் வேலை செய்வார்கள்.

- Advertisement -

இதை கதை போல வந்த மற்றொரு படம் பிரவீண் காந்தி இயக்கிய ஜோடி படம். இதில் பிரசாந்த், சிம்ரன் நடித்திருந்தனர். இந்த 2 படங்களுமே 1999ம் ஆண்டில் வெளியானது. இதில் ஜோடி படம் வெற்றி பெற்றது. கடந்த 1978ம் ஆண்டில் ரஜினி நடிப்பில் வெளியான படம் ஆயிரம் ஜென்மங்கள். ரஜினியின் தங்கையும் அவரது கணவரும் ஒரு அமானுஷ்ய அரண்மனை ஒன்றில் குடியேற அங்கு பல பிரச்னைகளை ஹீரோ எதிர்கொள்கிறார். கடந்த 2014ம் ஆண்டில் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை படத்தின் கதையும் இதுதான்.

கடந்த 2005ம் ஆண்டில் இயக்குனர் பேரரசு இயக்கத்தில் விஜய் திரிஷா நடிப்பில் வெளியான படம் திருப்பாச்சி. சென்னையில் தன் கணவருடன் குடியேறும் தங்கச்சிக்கு ரவுடிகளால் பிரச்னை ஏற்பட அதை தனது தங்கைக்கே தெரியாமல் நடிகர் விஜய் ரவுடிகளை துவம்சம் செய்து அழிப்பதுதான் கதை. இதே கதையை 2021ம் ஆண்டில் நடிகர் ரஜினிகாந்த் அண்ணனாகவும் கீர்த்தி சுரேஷ் தங்கையாகவும் நடிக்க சென்னைக்கு பதிலாக மும்பை என மாற்றி இயக்கி இருந்தார் இயக்குனர் சிறுத்தை சிவா. ஆனால் திருப்பாச்சி அளவுக்கு இந்த படம் வெற்றி பெறவில்லை.

- Advertisement -

கடந்த 2023ம் ஆண்டில் விநாயக் சந்திரசேகர் இயக்கத்தில் மணிகண்டன் நடிப்பில் வெளியான படம் குட்நைட். குறட்டை சத்தத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது. இதைப் போன்றே கணவனுக்கு பதிலாக மனைவிக்கு குறட்டை பிரச்னை இருப்பது போல் ஜீவி பிரகாஷ்குமார் நடித்த படம்தான் டியர். இரண்டு படங்களின் கதையும் ஒன்றாக இருந்த நிலையில் குட்நைட் படம் போல, டியர் படம் வெற்றி பெறவில்லை.

இப்படி தமிழ் சினிமாவில் ஒரே மாதிரியான கதையம்சத்தில் படங்கள் வெளிவருவது தொடர்கதையாக இருக்கிறது. இது ஒரு விதத்தில் ரசிகர்களை ஏமாற்றும் செயலாகவும் உள்ளது. கதைகளை காப்பியடித்து கதை செய்வது, நாவல்கள் மற்ற படங்களில் இருந்து கதைகளை திருடுவது போன்ற செயல்களில் இயக்குனர்கள் ஈடுபடுவது ரசிகர்களை ஏமாற்றுவது மட்டுமின்றி தமிழ் சினிமாவுக்கும் அது அவப்பெயரை ஏற்படுத்தி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்