தமிழ் சினிமாவில், புதிய படங்களில் பழைய பாடல்களை ஒலிக்க வைப்பது இப்போது டிரண்டிங் ஆகி விட்டது. முதலில் சில படங்களில், பழைய பாடல்களை ஒலிக்கவிட்டு, அந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் ஆடுவர். குறிப்பாக கவுண்டமணி, செந்தில், எஸ்எஸ் சந்திரன், கோவை சரளா, விவேக், வடிவேலு, சின்னி ஜெயந்த் போன்றவர்களின் காமெடி காட்சிகளில் இது இடம்பெறும்.
அதன்பிறகு சுப்பிரமணியபுரம் போன்ற சில படங்களில், படத்தில் இடம்பெறும் காட்சியின் தன்மைக்கேற்ப, அத்தகைய பாடல்களை ஒலிக்க விடுவது, படத்தில் வரும் கேரக்டர்களின் மன உணர்வுகளை பிரதிபலிப்பதாக, அது இருக்கும். அதற்கேற்ப அந்த பாடல் இடம்பெறும் சூழலும், பாடல் வரிகளும், வார்த்தைகளும் அதற்கேற்ப அமைகிறது.
இந்நிலையில், படத்தில் ஆக்ரோஷமான சண்டை காட்சிகள், சண்டைக்கு முந்தைய காட்சிகளில் இப்படி பாடல்களை ஒலிக்க வைக்கும் டிரண்டிங்கை கைதி, விக்ரம் படங்களின் மூலம் அறிமுகப்படுத்தி வைத்தவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தான். அது, ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இதை பின்பற்றிதான், மார்க் ஆண்டனி படத்தில் சண்டை காட்சிகளில் பஞ்சு மிட்டாய் சேலை கட்டி பாடல் இடம்பெற்று, ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இப்போது லியோ படத்தில் இடம்பெற்ற கரு, கரு கருப்பாயி, நீ வெளுத்தது ஏன் கருப்பாயி மற்றும் தாமரை பூவுக்கும் தண்ணிக்கும் எண்ணெய்க்கும் சண்டையே வந்தது இல்லே, என்ற பாடல்களும் செம டிரண்டாகி விட்டது.
இதில், சண்டையே வந்தது இல்லே என்ற வரிகளை கொண்ட பாடலை பாடும்போது, காபி ஷாப்புக்குள் சாண்டி மாஸ்டர் வந்துவிடுவதால், சண்டை இப்போது வந்துவிடும், என்ற சீக்ரட்டை சொல்லி இருந்தார் லோகேஷ் கனகராஜ். ஆனால், இந்த பாடல் மூலம் அதிக புகழ் அடைந்து மகிழ்ச்சியில் இருப்பவர் நடிகர் விக்னேஷ்தான்.
கடந்த 1995ம் ஆண்டில் அதாவது, 28 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த பசும்பெண் என்ற படத்தில் தான், தாமரை பூவுக்கும், தண்ணிக்கும், எண்ணெய்க்கும் சண்டையே வந்ததில்லை பாடல் வந்திருந்தது. விக்னேஷ்- யுவராணி இந்த பாடல் காட்சியில் ஆடியிருந்தனர். இதுகுறித்து நேர்காணலில் பேசிய நடிகர் விக்னேஷ், லியோ படத்தில் இந்த பாடலை பார்த்து, ரசிகர்கள் மிகவும் ரசித்தனர். நான் நடித்த படம் ரிலீஸானால், என்ன ரெஸ்பான்ஸ் இருக்குமோ அந்த அளவில் இந்த பாடலுக்காக, ரசிகர்களை என்னை அழைத்து பாராட்டி வருகின்றனர், இதற்கு லோகேஷ் கனகராஜ் தான் காரணம் என்று கூறி இருக்கிறார்.





