பி.வாசு தற்போது “சந்திரமுகி 2” திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா சரத்குமார், ஸ்ருஸ்டி டாங்கே போன்ற பலரும் நடித்துள்ளனர். வருகிற 15 ஆம் தேதி இத்திரைப்படம் வெளிவருகிறது.
கடந்த 2005 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த “சந்திரமுகி” திரைப்படம் 1000 நாட்கள் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்தது. ரஜினிகாந்த் கெரியரில் ஒரு வித்தியாசமான ஹாரர் திரைப்படமாக இத்திரைப்படம் அமைந்தது.
இதில் சந்திரமுகியாக கலக்கிய ஜோதிகா, தனது மிரட்டலான நடிப்பால் ரசிகர்களை பயமுறுத்தினார். இப்போதும் 90ஸ் கிட்ஸ்களின் விருப்பத்திற்குரிய திரைப்படமாக “சந்திரமுகி” அமைந்திருக்கிறது. இதில் இடம்பெற்றிருந்த வேட்டைய ராஜா கதாபாத்திரம் மிகவும் பிரபலமான கதாபாத்திரமாகும்.
அதில் ரஜினிகாந்த் “லகலகலக” என்று ஒரு வார்த்தையை கூறுவார். இந்த வார்த்தை ரசிகர்களிடையே மிகவும் டிரெண்டான வசனமாகும். குறிப்பாக அப்போதுள்ள குழந்தைகளிடம் இந்த வசனம் மிகவும் பிரபலமாக இருந்தது.
இந்த நிலையில் பி.வாசு சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் லகலகலகலக என்ற வார்த்தை எப்படி வந்தது என்பது குறித்த ஒரு முக்கிய தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.
அதாவது ரஜினிகாந்த் ஒரு முறை இமயமலைக்கு சென்றிருந்தபோது அங்கே ஒரு சித்தர் வானத்தை பார்த்துக்கொண்டு லகலகலக என்று கத்தினாராம். அந்த வார்த்தை மிகவும் வித்தியாசமாக இருந்ததாம். “சந்திரமுகி” திரைப்படத்தில் வேட்டைய ராஜா கதாபாத்திரத்தை குறித்து டிஸ்கஸ் செய்துகொண்டிருந்தபோது ஒரு நாள் ரஜினிகாந்த், பி.வாசுவின் முன்னிலையிலேயே “லகலகலகலக” என்று கூறி வேட்டைய ராஜா போலவே நடித்துக்காட்டினாராம். இதனை பார்த்ததும் பி.வாசு ஆச்சரியப்பட்டு போனாராம். உடனே சென்று ரஜினிகாந்தை கட்டிப்பிடித்துக்கொண்டாராம்.





