தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்த நடிகர் சூர்யாவுக்கு கடந்த 2014ம் ஆண்டில் இருந்தே பெரிய வெற்றிப் படங்கள் தமிழ் சினிமாவில் இல்லை. இதற்கிடையே நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியான ஜெய்பீம் சூரரைப் போற்று என 2 படங்கள் மட்டுமே அவருக்கு வணிக ரீதியான வெற்றியை தந்த படங்களாக இருந்தன.
அதே நேரத்தில் கடைசியாக இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ரெட்ரோ படம் ரூ. 230 கோடிக்கு மேல் வசூலித்த நிலையில், அதுவும் மாபெரும் வெற்றிப் படம்தான் என்று படக்குழு அறிவித்தது. இந்த படத்தின் சக்சஸ் மீட்டில் நடிகர் சூர்யா, அகரம் பவுண்டேசனுக்கு ரூ. 10 கோடி நன்கொடை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
சூர்யா நடித்த கங்குவா சிங்கம் 3 பசங்க 2 தானா சேர்ந்த கூட்டம் 24 மாசு என்கிற மாசிலாமணி காப்பான் அஞ்சான் என்ஜிகே எதற்கும் துணிந்தவன் என அடுத்தடுத்து 2014 முதல் 2024 வரை வெளியான சூர்யாவின் படங்கள் அனைத்துமே எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் ஏமாற்றம் தந்தது. இப்போது ஆர்ஜே பாலாஜி இயக்கிய கருப்பு படம் பெரிய திருப்புமுனையாக பெரிய வெற்றியை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் கருப்பு படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் இன்னும் கருப்பு படம் டிஜிட்டல் வியாபாரம் நடக்காததால் அதுவும் பொங்கலுக்கு தான் வரும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே பொங்கலுக்கு விஜய் நடித்த ஜனநாயகன் படமும் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படமும் ரிலீஸாக திட்டமிடப்பட்டுள்ளது. அதனால் கருப்பு படம் வசூலில் பாதிக்குமா என்ற சந்தேகமும் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
கருப்பு படத்தை தொடர்ந்து தெலுங்கு பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா தனது 46வது படத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு தற்காலிகமாக சூர்யா 46 என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை சித்தாரா எண்டர்டெயின்மென்ட் மற்றும் பார்ச்சூன் 4 சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
சூர்யா 46 படத்தில் கதாநாயகியாக மமிதா பைஜூ நடிக்கிறார். இந்த படத்துக்கு ஜீவி பிரகாஷ்குமார் இசையமைக்க உள்ளார். தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், சூர்யா 46 படத்தின் டைட்டில் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த படத்துக்கு விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் என்று டைட்டில் வைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. டைட்டில் மாஸ் ஆக இருப்பதாக சூர்யா ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். விரைவில் இந்த டைட்டில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.





