நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவருக்கும் நடிகர் தனஷிற்க்கும் 2004ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியருக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில், சினிமாவில் இயக்குனராக ஆசைப்பட்ட ஐஸ்வர்யா, தனது கணவரை வைத்து 3 படத்தை இயக்கினார்.

படம் வெளியாவதற்கு முன்னதாகவே கொலவெறி பாடல் ஹிட் அடித்ததால் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம், கலவையான விமர்சனத்தை பெற்றது. இதன் பிறகு, கவுதம் கார்த்திக்கை வைத்து வை ராஜா வை படத்தை இயக்கினார் ஐஸ்வர்யா. இந்த சூழலில், சமீபத்தில் தனிப்பட்ட காரணங்களுக்காக தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் தங்கள் திருமண உறவை முறித்து கொள்ளவதாக அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து மீண்டும் இயக்கத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தார் ஐஸ்வர்யா. லைகா நிறுவனம் தயாரிக்க லால் சலாம் என்னும் படத்தை அவர் இயக்கி வருகிறார். கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி எடுக்கபட்டு வரும் இந்த படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், தனுஷை விட்டு பிரிந்த ஐஸ்வர்யா, சிஐடி நகரில் உள்ள வீட்டை காலி செய்து தனது தந்தை வீட்டுக்கு சென்றார். அப்போது நீண்ட நாட்களாக திறக்காமல் இருந்த லாக்கரை அவர் சோதித்தபோது, 60 சவரன் தங்கம், வைரம், நவ ரத்தினங்கள் காணாமல் போனது தெரியவந்தது. இது குறித்து விசாரித்த போலீசார், அவர் வீட்டில் வேலை செய்த ஈஸ்வரி, அவரது மகள்களான பிருந்தா, மளிகை கடை உரிமையாளர் மஞ்சுளா ஆகியோரை கைது செய்தனர்.
விசாரணையில், பணிப்பெண் ஈஸ்வரி, நகையை கொஞ்சம் கொஞ்சமாக கொள்ளையடித்து சோழிங்கநல்லூரில் வீடு கட்டியதும், மகளுக்கு திருமணம் செய்து வைத்து மளிகை, காய் கடைகளை அமைத்து கொடுத்ததும் தெரியவந்தது. இந்த வழக்கில், ஈஸ்வரி மற்றும் அவரின் மகள்கள் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.
இதை எதிர்த்து ஈஸ்வரி தொடர்ந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது உழைத்து சம்பாதித்த பணத்தை சேமித்து வைத்திருந்த வங்கி கணக்கை முடக்கியிருப்பதால் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இது நீதிக்கு முரணானது என்றும் மனுதாரர் தரப்பு வாதிட்டது. இதனை பதிவு செய்த உயர்நீதிமன்றம், இதற்கு ஒரு வாரத்தில் காவல்துறை பதில் அளிக்க உத்தரவிட்டது.





