தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் ஒரு நடிகராக இருப்பவர் நடிகர் ரஞ்சித். சிந்துநதிப் பூ என்ற படம் மூலம், தமிழ் சினிமாவில் அறிமுகமான ரஞ்சித் பொன்விலங்கு, பாரதி கண்ணம்மா, பாண்டவர் பூமி, நேசம் புதுசு, பசுபதி மே/பா ராசக்காபாளையம், பீஷ்மர் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர். சில படங்களை அவரே நடித்து தயாரித்தும் இருக்கிறார்.
அந்த வகையில், சமீபத்தில் அவரது டைரக்ஷனில் அவரே நாயகனாக நடித்துள்ள படம் கவுண்டம்பாளையம். இந்த படத்தில் நாடக காதலையும், இளம் பெண்கள் காதல் என்ற பெயரில் ஏமாற்றப்படுவதையும், பெற்றோரின் வலியையும் சொல்லும் கருவை மையப்படுத்தி இந்த படத்தை எடுத்திருப்பதாக நடிகர் ரஞ்சித் ஏற்கனவே கூறியிருந்தார். ஜூலை 5ம் தேதி ( நாளை) இந்த படம் ரிலீஸ் செய்யப்படும் என்றும் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று கோவை மாநகர காவல் ஆணையரகத்துக்கு வந்த அவர், கமிஷனரை சந்தித்து மனு ஒன்றை அளித்துள்ளார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஞ்சித் கூறியதாவது, நாளை கவுண்டம்பாளையம் படம் ரிலீஸ் ஆகாது. இந்த படம் திரையிடுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக முதல்வர் மற்றும் செய்தித்துறை அமைச்சரை நேரில் சந்தித்து படத்தை வெளியிட ஆதரவு கேட்க உள்ளேன். இந்த படத்தை தியேட்டர்களில் திரையிடக் கூடாது என பலர் முனைப்போடு இருப்பதாக, தியேட்டர் உரிமையாளர்கள் என்னிடம் கூறியது மிகவும் வருத்தமளிக்கிறது. நாடக காதலை, பெற்றோர் வலியை படமாக எடுத்துள்ளேன். இதற்கு பல இடங்களில் இருந்து எதிர்ப்பு வருகிறது.
ஒரு படத்தை எடுப்பது என்பது மிகவும் சிரமமானது. என் வாயில் இருந்து வரும் கருத்துகள் அனைத்தும் உண்மையானது. நான் அரசியல்வாதி கிடையாது. இந்த படத்தின் வெற்றிதான், இந்த படத்தை எதிர்ப்பவர்களுக்கு நான் தரும் பதிலாக இருக்கும். சென்சார் சான்றிதழ் வாங்கியும், இந்த படத்தை என்னால் வெளியிட முடியவில்லை. தமிழக அரசின் அனுமதி பெற்று இந்த படத்தை விரைவில் நான் வௌியிடுவேன்.
இந்த படத்தை திரையிட்டால், கலாட்டா செய்வோம் என்று தியேட்டர் உரிமையாளர்களை மிரட்டுகின்றனர். தியேட்டர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியம். நாடக காதலை, குடும்பக் கதையை நல்ல படமாக எடுத்துள்ளேன். ஆனால் என்னைப் போன்ற கலைஞனை வளர விடாமல் தடுக்கின்றனர். கவுண்டம்பாளையம் படம் நாளை வெளிவராது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன், என்று கூறியிருக்கிறார் நடிகர் ரஞ்சித். இது, தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





