சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த கங்குவா படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்த படம் சூர்யா ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா ரசிகர்கள் மத்தியிலேயே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நிச்சயம் இந்த படம் சூர்யாவின் படங்களில் இருந்து மாறுபட்ட படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக கங்குவா சில விருதுகளை பெறவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்தை தொடர்ந்து வாடிவாசல் படத்தில் சூர்யா நடிப்பதாக இருந்த நிலையில், அந்த படத்தில் இருந்து அவர் விலகி விட்டார். எனவே அந்த படத்தில் வெற்றிமாறனின் ஆஸ்தான நடிகரான தனுஷ் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அதே போல் வணங்கான் படத்தில் இருந்தும் ஏற்கனவே சூர்யா விலகி விட்டார். டைரக்டர் பாலா, டைரக்டர் வெற்றிமாறன் படங்களின் வாய்ப்பை சூர்யா நிராகரித்தது மிக தவறு என அவரது ரசிகர்கள் அதிருப்தியில் .உள்ளனர்.
இந்நிலையில் இறுதிச்சுற்று, சூரரைப் போற்று போன்ற வெற்றிப் படங்களை தந்த இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் புறநானூறு படத்தில் இருந்தும் சூர்யா இப்போது விலகியிருப்பது உறுதியாகி இருக்கிறது. இந்த படத்தை தற்போதைக்கு ஒத்தி வைத்திப்பதாக சூர்யாவும், சுதா கொங்காராவும் கூட்டான அறிக்கை விட்டனர். அதில் பெஸ்ட் ஆன படமாக தர வேண்டியிருப்பதால் கால அவகாசம் ஆகும் என்றும் அதில் தெரிவித்தனர்.
ஆனால் உண்மையில், நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்த வகையில் இந்த படம் நிறுத்தப்பட்டு விட்டதாக உண்மை தகவல் வெளியாகி உள்ளது. ஏனெனில் இந்த படத்தின் கதை இந்தி எதிர்ப்பை மையப்படுத்தியதாக இருக்கிறது. அந்த காலகட்டத்தில் இந்தி திணிப்பை செய்த காங்கிரஸ் கட்சிக்கு எதிரானதாகவும் இந்த கதை இருப்பதாக கூறப்படுகிறது.
நடிகர் சூர்யா, இந்தியை தாய்மொழியாக கொண்ட ஜோதிகாவை திருமணம் செய்திருக்கிறார். இப்போது சென்னையை விட்டு மும்பையில் சென்று குடியேறி இருக்கிறார். பாலிவுட் சினிமாவில் கால் பதித்துள்ள சூர்யா, இந்தியில் கர்ணன் என்ற படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். மேலும், தொடர்ந்து இந்தியில் பல பட வாய்ப்புகளை பெற ஜோதிகா, நக்மாக இருவரும் சூர்யாவுக்காக முக்கிய இயக்குனர், தயாரிப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்த சூழலில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக கொண்ட படத்தில் சூர்யா நடித்தால், அதுவும் மும்பையில் இருந்துக்கொண்டு இப்படி ஒரு கதையில் நடித்தால், தனது பாலிவுட் சினிமா கனவு, சிதைந்து போகும். இது தனது சினிமா கேரியரை பாதிக்கும் என்பதால் அந்த கதையை மாற்றுமாறு, ஸ்கிரிப்ட்டை மாற்றுமாறு சுதா கொங்காராவை நிர்பந்தம் செய்ததால் தான், அந்த படம் டிராப் ஆகியிருக்கிறது என்ற உண்மை இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.





