தமிழ் சினிமாவில் இதுவரை வெறும் இரண்டே இரண்டு திரைப்படங்கள் மட்டுமே இயக்கினாலும் அதன் மூலமே ஏராளமான ரசிகர்களை சம்பாதித்து இருப்பவர் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா. ஆரம்ப காலத்தில் இயக்குனர் புஷ்கர் காயத்ரியுடன் இணைந்து பணிபுரிந்து வந்தவர்தான் தியாகராஜன் குமாரராஜா. அவர்கள் இயக்கத்தில் ஆர்யா நடித்த ஓரம்போ திரைப்படத்தின் வசனகர்த்தாவாக தியாகராஜன் குமாரராஜா பணிபுரிந்திருந்தார்.
பிறகு வ குவாட்டர் கட்டிங் திரைப்படத்திலும் பணியாற்றிய தியாகராஜன் குமாரராஜா, ஆரண்ய காண்டம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். மிகவும் எதார்த்தமான காட்சிகள், குறிப்பாக வசனங்கள், திரைக்கதை அமைப்பு என அத்தனை விஷயங்களும் ஆரண்ய காண்டத்தில் புதுமையாக இருந்தது.
இந்த திரைப்படம் வெளிவந்த சமயத்தில் பெரிய அளவு வரவேற்பை பெறவில்லை. இருப்பினும் படத்தைப் பார்த்தவர்கள் நன்றாக இருப்பதாகவே கூறி வந்தனர். தொடர்ந்து அந்த திரைப்படத்திற்காக தியாகராஜன் குமாரராஜா தேசிய விருதை பெற்ற போதுதான் ஆரண்ய காண்டம் திரைப்படம் குறித்து பலருக்கும் தெரிய வந்தது.
அதன் பிறகு அந்த திரைப்படத்தைப் பற்றி பலரும் தங்கள் பாராட்டுகளை இணையத்தில் பதிவிட்டு வந்தனர். இதனைத் தொடர்ந்து ஒரு பெரிய இடைவேளை விட்ட தியாகராஜன் குமாரராஜா, சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தை இயக்கினார். விஜய் சேதுபதி, பகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின் என ஏராளமானோர் நடித்திருந்த அந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது.
நான்கு கதைகளை மையப்படுத்தி, அதற்கு ஏற்றவாறு திரைக்கதை அமைத்து, கலக்கியிருந்தார் தியாகராஜன் குமாரராஜா. படம் மிகப்பெரிய வசூலை எட்டவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக பாராட்டை பெற்றது. குறிப்பாக அந்த திரைப்படத்தில் பகத்ஃபாஸில் பேசும் வசனங்களும், சமந்தாவின் கேரக்டரும் பலரையும் ஈர்த்தன.
இந்த நிலையில் மீண்டும் மிகப்பெரிய இடைவெளிக்கு பிறகு ஒரு திரைப்படத்தை இயக்க தியாகராஜன் குமாரராஜா முடிவு செய்துள்ளார். மலையாள நடிகர் மோகன்லால் மற்றும் மணிகண்டன் ஆகியோர் இந்த திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைக் கேள்விப்பட்டு ஆச்சரியமடைந்திருக்கும் ரசிகர்கள் அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர்.





