கோலிவுட்டில் கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக பல வித்தியாசமான கெட்அப்களை போடுவர் நடிகர் விக்ரம். ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களிலும், டப்பிங் ஆர்ட்டிஸ்டாகவும் பணியாற்றிய விக்ரம் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய படம் பாலா இயக்கத்தில் வெளியான சேது. அதன்பின்னர் காசி, பிதாமகன் நடிப்பில் கலக்கிய விக்ரம், சாமி படத்தில் தன்னை கமர்ஷியல் ஹீரோவாக மாற்றிக்கொண்டார்.
தொடர்ந்து அந்நியன், கந்தசாமி, ராவணன், தெய்வத்திருமகள், ஐ என ஒவ்வொரு படத்திற்கும் இவர் தன்னை மெருகேற்றிக்கொண்டே சென்றார். இருப்பினும் கடந்த சில ஆண்டுகளாக விக்ரம் படங்கள் லாபகரமான வெற்றியை பெறவில்லை என்ற சூழல் நிலவியது. கடைசியாக மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பிரம்மாண்ட திரைப்படமான பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம் வாழ்ந்திருந்தார். இந்த கேரக்டர் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இப்படமும் பெரும் வெற்றியை பெற்றது.
முன்னதாக கடந்த 2017ஆம் ஆண்டு கவுதம் வாசுதேவ் மேனன் உடன் விக்ரம் இணைந்த படம், துருவ நட்சத்திரம். இப்படத்தில் ரிது வர்மா, பார்த்திபன், ராதிகா சரத்குமார், தேவதர்ஷினி( விஜய் டிவி புகழ் டிடி) உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தில் சிறிய டீசர் வெளியாகி அப்போதே எதிர்பார்பை எகிரச் செய்தது. ஆனால் சில காரணங்களால் இப்படத்தின் பணிகள் கிடப்பில் போடப்பட்டன.
இந்நிலையில் இப்படத்தை ரிலீஸ் செய்யும் நோக்கில் டைரக்டர் கவுதம் மேனன், போஸ்ட் புரெடக்சன் பணிகளில் ஈடுபட்டுவருகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் செகண்ட் சிங்கிள் சமீபத்தில் வெளியானது. இதற்கிடையே படத்தில் ஐஸ்வர்யா ராஜேஸ் நடித்திருந்த காட்சிகள் படத்தின் நீளம் கருதி நீக்கப்படுவதாக கடந்த சில தினங்களுக்கு முன் தகவல் வெளியானது. அதன்படி முன்னதாக வெளியாகியிருந்த ஒரு மனம் பாடலில் இடம்பெற்றிருந்த ஐஸ்வர்யா ராஜேஸின் காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது. விக்ரம், ரிதுவர்மா ஆகியோரின் காட்சிகள் மட்டும் அடங்கிய புதிய வெர்ஷனை படக்குழு நேற்று வெளியிட்டது.
கடந்தாண்டு விக்ரம், அவரது மகன் துருவ், பாபி சிம்ஹா, சிம்ரன் நடிப்பில் வெளியான மகான் படத்தில் நடிகை வாணி போஜனின் காட்சிகள் நீளத்தை குறைப்பதற்காக நீக்கப்பட்டது. தற்போதும் அதேபோன்ற நிலைமை துருவ நட்சத்திரத்திலும் ஐஸ்வர்யா ராஜேஸ்க்கு ஏற்பட்டுள்ளது.





