ரஜினிகாந்தின் “ஜெயிலர்” திரைப்படம் கடந்த 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நெல்சன் “பீஸ்ட்” திரைப்படத்தில் விட்டதை “ஜெயிலர்” திரைப்படத்தில் பிடித்துவிட்டார் என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.

படத்தில் ரஜினிகாந்த் மிகவும் ஸ்டைலாக நடித்திருக்கிறார் எனவும் 72 வயதிலும் இளம் வயது ரஜினி போல் மிகவும் துருதுருவென இருக்கிறார் எனவும் படம் பார்த்தவர்கள் கூறி வருகின்றனர். அதே போல் படத்தில் டார்க் காமெடி நன்றாக ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது எனவும் ரஜினிகாந்திற்கு ஏற்ற மாஸ் ஆன திரைக்கதையாக இருப்பதாகவும் பாராட்டி வருகின்றனர்.
“ஜெயிலர்” திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே டிக்கெட் முன்பதிவில் அசூர சாதனை படைத்திருந்தது. இத்திரைப்படம் வெளியாகி இரண்டு நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் உலக அளவில் “ஜெயிலர்” திரைப்படம் 100 கோடி வசூலை நெருங்கியுள்ளது.

இந்த நிலையில் திரையரங்கு நிறுவனரும் விநியோகஸ்தருமான திருப்பூர் சுப்ரமணியம் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படத்தின் வசூல் குறித்து ராஜ்கமல் நிறுவனத்திற்குத்தான் தெரியும். அவர்கள் 400 கோடிகளுக்கும் மேல் வசூல் வந்துள்ளதாக கூறுகின்றனர்.
அது போல் ஜெயிலர் படத்தின் வசூல் என்ன என்பது சன் பிக்சர்ஸுக்குத்தான் தெரியும். புதிதாக வெளியாகிற பெரிய படங்களுக்கு மக்கள் வருகிறார்களா இல்லையா என்பதை மட்டுமே நாங்கள் பார்ப்போம். பாக்ஸ் ஆபீஸ் போட்டி எல்லாம் தேவையில்லாத சண்டையைத்தான் உருவாக்கும். மீடியாக்கள்தான் இதனை ஊதிப் பெரிதாக்கி ரசிகர்களிடையே சண்டையை மூட்டிவிடுகின்றனர்” என்று அவர் கூறியுள்ளார்.





