தமிழ் சினிமாவில் யதார்த்த கதைகளை கொண்ட படங்களை ரசிகர்கள் எப்போதுமே கொண்டாட தவறியது இல்லை. ஸ்டார் ஹீரோக்களின் கமர்ஷியல் படங்கள் வெற்றி பெறுவதை போலவே இந்த யதார்த்த படங்களையும் ரசிகர்கள் பெரிய வெற்றியை பெறச் செய்து விடுகின்றனர்.
அந்த வகையில் பார்க்கிங் குட்நைட் குடும்பஸ்தன் லப்பர் பந்து 96 மெய்யழகன் போன்ற படங்களை குறிப்பிட்டுச் சொல்லலாம். இந்த படங்களின் வரிசையில் இப்போது நடிகர் சசிக்குமார் நடிகை சிம்ரன் நடித்த டூரிஸ்ட் பேமிலி படமும் இணைந்திருக்கிறது. அபிஷன் ஜீவிந்த் இயக்கிய இந்த படம் பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றிருக்கிறது.
வழக்கமாக கடந்த பல ஆண்டுகளாகவே தமிழ் சினிமா ஒரு மோசமான பாதையில் சென்று கொண்டிருப்பதாக சினிமா விமர்சகர்கள் பலரும் வருத்தப்படுகின்றனர். கதையை நம்பாமல் ஹீரோவை நம்பி படம் எடுக்கும் இயக்குனர்கள் தமிழ் சினிமாவில் பெருகி விட்டனர். அதனால் முன்னணி ஹீரோக்கள் மட்டுமே தொடர்ந்து பெரிய பட்ஜெட் படங்களில் நடிக்கின்றனர்.
மேலும் பான் இந்தியா படங்கள் என்ற பெயரில் பல மொழி நடிகர்கள் ஒன்றாக சேர்ந்து நடித்து வசூலில் பல நூறு கோடி ரூபாய்களை குவித்து விடுகின்றனர். ஆனால் இரண்டாம் நிலை 3ம் நிலையில் குணச்சித்திர நடிகர்களாக, துணை நடிகர்களாக உள்ள ஏராளமானோர் படங்களில் நடிக்க வாய்ப்பே இல்லாமல் தவிக்கின்றனர். வருமானம் இழந்து குடும்பங்களை காப்பாற்ற முடியாமல் தடுமாறுகின்றனர்.
இப்படியே தமிழ் சினிமா போனால், சினிமாவை நம்பி மட்டுமே வாழ்ந்துவரும் ஏராளமான துணை நடிகர்கள் நடிகைகள் நிலை இன்னும் மோசமாகி விடும். தொழில்நுட்ப கலைஞர்கள், தொழிலாளர்களும் பணிவாய்ப்பு இழந்து விடுகின்றனர். சின்ன பட்ஜெட் படங்கள் என்பதே தமிழ் சினிமாவில் அரிதாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் டூரிஸ்ட் பேமிலி போன்ற சின்ன பட்ஜெட் படத்துக்கு கிடைத்துள்ள அபரிமிதமான வரவேற்பை பார்த்த பிறகாவது, தமிழ் சினிமாவில் நல்ல கதையம்சங்களை கொண்ட சின்ன பட்ஜெட் படங்கள் நிறைய வரவேண்டும். 2ம் நிலை நடிகர்கள், துணை நடிகர்களுக்கு பட வாய்ப்புகளும் இதனால் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த 1ம் தேதி வெளியான டூரிஸ்ட் படம் 12 நாட்களில் ரூ. 51 கோடி வசூலை கடந்திருக்கிறது. இது கோலிவுட் வட்டாரத்தில் பெரிய ஆச்சரியத்தை தந்துள்ளது. ரூ. 100 கோடிக்கு வசூல் வந்துவிடுமா என்றும் கேள்வி எழுந்துள்ளது.





