அஜித் தற்போது இரண்டு திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதில் ஒன்று விடா முயற்சி. மற்றொன்று குட் பேட் அக்லி. இதில் விடாமுயற்சி திரைப்படத்தை இந்த ஆண்டு இறுதியில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டு இருக்கிறார்கள். அதற்கான பணிகளிலும் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இதில் விடா முயற்சி திரைப்படத்தை மகிழ்திருமேனி இயக்கி வருகிறார். இதில் அர்ஜுன் ஆரவ் மற்றும் ரெஜினா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த வார இறுதியில் இதன் படப்பிடிப்பு முடிவடைகிறது. இதில் அஜித்தின் மனைவியாக திரிஷா நடிக்கிறார். இருவர் தொடர்பான காட்சிகள் படத்தில் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.
அதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே அண்மையில் ஒரு புகைப்படம் வெளியாகியிருந்தது. அதில் கருப்பு நிற முடியுடன் அஜித் சிரித்தபடி இருக்க, திரிஷாவும் உடன் இருந்தார். இந்த திரைப்படத்தை அஜித் ரசிகர்கள் அதிகமாக பகிர்ந்தனர். காதல் ரசம் சொட்ட சொட்ட இந்த புகைப்படம் இருப்பதாகவும் அவர்கள் கருத்து பதிவிட்டனர்.
இப்படியான சூழலில், அஜித்தின் அடுத்த திரைப்படம் ஆன குட் பேட் அக்லியிலும் திரிஷாவே ஹீரோயினாக நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். மிகவும் வித்தியாசமான ஜானரில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மிக ஜாலியான அஜித்தை இந்த திரைப்படத்தில் பார்க்கலாம் என்று சினிமா விமர்சகர்கள் கூறி வருகிறார்கள்.
இதன் முதல் கட்ட படப்பிடிப்பு அண்மையில் ஹைதராபாத்தில் முடிந்தது. அதில் அஜித் சம்பந்தப்பட்ட காட்சிகள் மட்டும் படம் பார்க்கப்பட்டன. இந்த நிலையில் தற்போது, இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பணிகள் சூடு பிடித்துள்ளன. இதில் அஜித்துடன் முக்கிய நட்சத்திரங்கள் கலந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அது யார் யார் என்றெல்லாம் இன்னும் தெரிவிக்கப்படவில்லை.
இருப்பினும் தெலுங்கு நடிகை ஸ்ரீலிலா இந்த படத்தில் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது புதியதாக திரிஷாவும் படத்தில் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே அஜித்துடன் இணைந்து திரிஷா, கிரீடம், ஜி, மங்காத்தா, என்னை அறிந்தால் ஆகிய திரைப்படங்களில் நடித்தார். தற்போது விடா முயற்சி திரைப்படத்திலும் நடித்து வருகிறார். தொடர்ந்து அவர் ஆறாவது முறையாக அஜித்துடன் குட் பேட் அக்லி திரைப்படத்திற்காக இணைந்திருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.





