தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இது என்ன மாயம் என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அவர், சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரஜினி முருகன் மற்றும் ரெமோ என இரண்டு வெற்றி படங்களில் நடித்தார். அங்கிருந்து கீர்த்தி சுரேஷின் மார்க்கெட் எகிற ஆரம்பித்தது.
தொடர்ந்து முன்னணி நடிகர்களான விஜய்யுடன் இணைந்து பயணிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. பைரவா மற்றும் சர்க்கார் என அடுத்தடுத்து இரண்டு திரைப்படங்களில் விஜய்க்கு அவர் ஜோடியாக நடித்தார். இதேபோல் சூர்யாவுக்கு ஜோடியாக தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்திலும் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார்.
தமிழ் மொழியை தாண்டி பிற மொழிகளிலும் கீர்த்தி சுரேஷ் பரிச்சயமான நடிகையானார். குறிப்பாக மகாநதி திரைப்படம் அவருக்கு மிகப் பெரிய திருப்புமுனையை கொடுத்தது. மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில், கீர்த்தி சுரேஷ் அந்த கதாபாத்திரமாகவே கீர்த்தி சுரேஷ் வாழ்ந்திருப்பார்.
இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக அவர் தேசிய விருதையும் பெற்றார். தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் அவர் கவனம் செலுத்தி வந்தார். இப்படியான சூழல்தான் கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்த அறிவிப்பு வெளியானது. அவரின் நீண்ட நாள் காதலர் ஆன்டனி தட்டிலை கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்வதாக அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கோவாவில் திருமண நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்றன. நேற்று நடந்த விழாவில், திரைத்துறையைச் சேர்ந்த முக்கிய நபர்கள் விருந்தினர்கள் மற்றும் கீர்த்தி சுரேஷின் உறவினர்கள் பங்கேற்றனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.
இந்த நிலையில், கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் விஜய் மற்றும் திரிஷா ஆகியோர் கலந்து கொண்டது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. இருவரும் சேர்ந்து தனி விமானத்தில் கோவாவிற்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்து, தனது இன்ஸ்டாகிராமில் திரிஷா புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதேபோல், விழாவில் பரிமாறப்பட்ட உணவுகளையும் அவர் புகைப்படம் எடுத்து வெளியிட்டு இருக்கிறார். அதில் பாரம்பரிய உணவுகள் இடம் பெற்றுள்ளன.





