தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் கடந்த வாரம் ஞாயிறன்று நடந்தது. இதைத் தொடர்ந்து சென்னை பனையூரில் கட்சியின் செயற்குழு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் இன்று காலை நடந்தது. நடிகர் விஜய் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்; காமராஜர் பெரியார் அம்பேத்கர் வேலுநாச்சியார் அஞ்சலை அம்மாள் ஆகியோரின் அவர்களது கட்சி கொள்கையையும் உறுதியாக பின்பற்றுதல், விக்கிரவாண்டில் நடந்த மாநாட்டை வெற்றி பெறச் செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தல், ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை சட்டமாக்குவதற்காக ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படும் பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்தல்.
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்க சட்டம் கொண்டு வர மத்திய அரசை வலியுறுத்துதல், சாதிவாரி கணக்கெடுப்பு உடனே நடத்த வேண்டும், மருத்துவம் போலவே கல்வியும் மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும். இதன் மூலம் நீட் தேர்வை மாநில அரசை நீக்கி தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவை நிறைவேற்ற முடியும்.
பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும், சென்னையைப் போன்று கோவையின் முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில் மெட்ரோ ரயில் பணிகளை விரைந்து துவங்க வேண்டும், இலங்கை தமிழர்கள் மற்றும் தமிழக மீனவர்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும். அரசின் வருவாயை பெருக்க எந்த நடவடிக்கை எடுக்காமல் மின் கட்டணம், பால் விலை, சொத்து வரிகள் போன்று மக்கள் மீது மேலும் வரி சுமையை மட்டுமே அதிகமாக திணித்த திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்தல்.
தமிழகத்தில் அரங்கேறும் குற்ற செயல்கள் சட்டம் ஒழுங்கு சீர்கேடு கள்ளச்சாராய் விற்பனை, போதைப் பொருள் புழக்கம் தடுக்காத திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்தல். மாதத்திற்கு இருமுறை மின்கட்டணம் கணக்கீடு முறை கைவிட்டு மாதந்தோறும் மின்கட்டண கணக்கீடு முறையை கொண்டுவர வேண்டும். மதுக்கடைகளை கால நிர்ணயம் செய்து மூட வேண்டும், மதுக்கடை மூலம் பெறும் வருவாய் விட கூடுதல் வருவாய் கிடைக்கும் வகையில் மாற்று திட்டங்களை கண்டறிந்து செயல்படுத்த வேண்டும்.
சென்னையில் உச்ச நீதிமன்ற கிளை அமைக்க வேண்டும். தமிழக மக்களின் வரிப்பணத்தில் புதிதாக கட்டப்படும் திறக்கப்படும் பஸ் ஸ்டாண்டுகள் பூங்காக்கள் நூலகங்கள் மற்றும் கலையரங்குகளுக்கு தமிழ் மண்ணில் இருந்து நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த சுதந்திர போராட்ட தியாகிகள், மொழிப்போர் தியாகிகள் பெயரை சூட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.





