தமிழ் சினிமாவில், பணம் காய்த்து கொட்டும் மரங்கள் எங்கேனும் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால், தமிழகம் முழுக்க லட்சக்கணக்கான சினிமா ரசிகர்கள் இருக்கின்றனர். தங்களது வருமானத்தில், பெரும்பகுதியை சினிமா தியேட்டர்களில் கொட்ட அவர்கள் தயாராக இருக்கும் வரை, சினிமா நட்சத்திரங்கள் வீடுகளில் பண மழை கொட்டிக்கொண்டே தான் இருக்கும்.
இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கும் விஜய் 68 படத்தில், விஜய் சம்பளம் ரூ. 200 கோடி என உயர்த்தப்பட்டிருக்கிறது. லியோ படத்துக்காக அவர் பெற்ற சம்பளம் ரூ. 125 கோடி தான். அந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகாத நிலையிலேயே எப்படி, 75 கோடி ரூபாய் சம்பளம் விஜய்க்கு உயர்த்தப்பட்டது என்பது தெரியவில்லை.
இப்படி 200 கோடி ரூபாய் கொட்டிக் கொடுக்கும் அளவுக்கு, அந்த படத்தில் விஜய் நடிக்கிறார் என்றால், அந்த படத்தின் மூலம் எவ்வளவு வருவாயை, லாபத்தை திட்டமிட்டுள்ளனர் என்பதும் கேள்வியாக எழுகிறது. ஜவான், பதான் போன்ற படங்கள் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் என்ற நிலையில், ஜெயிலர் படம் 600 கோடி ரூபாயை வசூலித்தது. அதே அடிப்படையில், விஜய் 68 படமும் ஆயிரம் கோடி ரூபாய் இலக்காக இருக்கலாம்.
இப்போது மற்றொரு புதிய தகவல் வந்திருக்கிறது. இந்த புதிய படத்தில் விஜய் அப்பா, மகன் என இரண்டு கேரக்டர்களில் நடிக்கிறார். இதில் அப்பாவுக்கு சிநேகாவும், மகனுக்கு மீனாட்சி சவுத்ரியும் ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர பிரசாந்த், பிரபு தேவா உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடிக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்த படத்தில், மகன் கேரக்டரில் நடிக்கும் விஜய், 25 வயது பையனாக தோற்றமளிக்க வேண்டும் என்பதற்காக, அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸக்கு சில வாரங்களுக்கு முன் வெங்கட்பிரபுவும், விஜயும் சென்று வந்தனர். விஜயை மிக இளமையாக 25 வயது தோற்றத்தில் காட்ட புல் பாடி ஸ்கேன் செய்யப்பட்டு, அதற்கான சில விஞ்ஞான சோதனைகளும் செய்யப்பட்டுள்ளது. இந்த விஎப்எக்ஸ்க்காக மட்டுமே 20 கோடி வரை செலவிடப்படுகிறது என்ற தகவலும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே விஜய்க்கு, 200 கோடி ரூபாய் சம்பளம் என்ற நிலையில், 75 கோடி ரூபாய் இழப்பை ஈடுசெய்ய, படத்தின் கேமராமேன், டெக்னீஷியன்ஸ் உள்பட பலரது சம்பளம், பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த 20 கோடி ரூபாய் செலவை, விஜய் சம்பளமாக ரூ. 200 கோடியில் கழிப்பார்களா அல்லது அந்த 20 கோடி ரூபாய் செலவும், தயாரிப்பாளர் தலையில் விழுமா என்பது இன்னமும் தெரியவில்லை.





