நடிகர் ரஜினிகாந்த் – நெல்சன் கூட்டணியில் உருவான ‘ஜெயிலர்’ படம் தான் கோலிவுட்டின் தற்போதைய ஹாட் டாபிக். சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இப்படம் இந்தியா மட்டுமல்லாது பல வெளிநாடுகளிலும் வசூல் சாதனை புரிந்து வருகிறது. இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, மிர்னா மேனன், மாஸ்டர் ரித்விக், யோகி பாபு, விநாயகம், ஜாக்கி ஷெராஃப், மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், தமன்னா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
அனிருத் இசையமைத்திருந்த இப்படத்தில் இடம்பெற்ற ‘காவாலா’ பாடல் பட்டித்தொட்டியெங்கும் ஹிட் அடித்தது. அந்தப் பாடலில் தமன்னாவின் நடன அசைவுகளை போன்று பலரும் ரீல்ஸ் பதிவிட்டு வருகின்றனர். அந்தப் பாடலில் ரஜினி, ஒரு சில இடங்களில் மட்டும் தோன்றி தமன்னாவுடன் நடனம் ஆடுவார்.
அதிலும் குறிப்பாக பாடலின் இறுதிக்கட்டத்தில் ரஜினி, ஜாஃப்ர் சித்திக் உடன் வரும்போது தியேட்டரில் சிரிப்பலை ஏற்படும். இதனிடையே அந்த காட்சி எடுக்கப்பட்டபோது நடந்த சம்பவம் குறித்து ஜாஃபர் சித்திக் மனம் திறந்துள்ளார். காவாலா பாடல் எடுத்தபோது 150 பேர் முன்னாடி ஆடிட்டு இருந்தாங்க. நான் மட்டும் தனியா பின்னாடி ஆடிட்டு இருந்தேன்.
நான் ஃப்ரேம்ல தெரியல. நல்லா கெட்அப் போட்டும் இப்படி ஆயிடுச்சேன்னு காண்டு ஆயிடுச்சு. அப்போ நெல்சன், ரஜினிகாந்த், ஜானி மாஸ்டர் என்னை பாத்து சிரிச்சுட்டே ஏதோ பேசினாங்க. நான் என் கெட்அப் பாத்துதான் சிரிக்குறாங்கன்னு நினைச்சேன். அதுக்கு அப்புறம்தான் பாடலில் அந்த விஷயத்தை வைக்கலாமா வேணாமான்னு பேசி இருக்காங்க.
தலைவர் என்னுடைய ஆட்டத்தை பாத்துட்டு குபீர்னு சிரிச்சிட்டாரு. பிறகு அந்த போர்ஷனை வைக்கலாம்னு முடிவு பண்ணாங்க. படத்துல அது வருமா வராதான்னு ஒரு பயம் இருந்தது. ஆனா அதை வச்சுட்டாங்க என்றார். அதே போல படத்தில் நான் வித்யாசமாக வாய் அசைப்பேன். அது நான் எதார்த்தமாக பண்ணது. நெல்சன் என்னை அழைத்து அதை படம் முழுவதும் பாலோ பண்ணிக்கோ என்று கூறிவிட்டார் என்றார் ஜாபர்.





