இன்று தமிழக சட்டசபையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைமையில் முதல்வர் விஜய் ஆட்சி தொடர நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. இதில் 144 எம்எல்ஏக்கள் ஆதரவு தந்த நிலையில் அறுதி பெரும்பான்மை பெற்று தவெக ஆட்சி தொடர்கிறது. தமிழக முதல்வராக விஜய் நீடிக்கிறார்.
இந்நிலையில் இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பின் போது திமுக எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, எங்கள் கூட்டணி கட்சியில் இருந்த கட்சிகளின் ஆதரவு மற்றும் சிலர் என்று விஜய் கூறிய சிலரிடமிருந்து கடன் வாங்கி தான் இந்த அரசின் ஆட்சி நடந்து வருகிறது. இப்போது விஜயை ஏன் முதலமைச்சர் ஆக்கினோம் என மக்கள் நினைத்து வேதனைப்படுகிறார்கள்.
கடந்த 5 ஆண்டுகளாக திமுக அரசு சார்பில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் சென்றடைந்த பல்வேறு மக்கள் நல திட்டங்களை இந்த அரசும் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். ஏனெனில் இந்த மாதம் 15ம் தேதி மகளிர் உரிமைத்தொகைக்காக ஒரு கோடியே 31 லட்சம் தாய்மார்கள் காத்திருக்கிறார்கள். அந்த தொகை அவர்களது குடும்ப வாழ்க்கைக்கு முக்கிய ஆதாரமாக உள்ளது.
அதேபோல் புதுமைப் பெண் தமிழ் புதல்வன் போன்ற கல்வி உதவி திட்டங்களின் கீழ் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர கல்வி ஊக்கத்தொகை இதுவரை வரவில்லை. கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட உள்ள நிலையில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் அந்த உதவித் தொகையை நம்பி காத்திருக்கிறார்கள். நான் முதல்வன் திட்டம் தாயுமானவர் என பல்வேறு திட்டங்களை பயனாளிகளும் இந்த அரசு என்ன செய்யப் போகிறது என்று எதிர்பார்த்துள்ளனர். புதிய முதலமைச்சர் பதவி ஏற்றவுடன் சில காலம் அவகாசம் கேட்டது சரி. அவகாசம் எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் மக்களை நீண்ட காலம் காக்க வைக்காதீர்கள்.
தேர்தலுக்கு முன்பு மகளிருக்கு மாதம் 2500 ரூபாய் ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் தங்க மோதிரம் பட்டுப்புடவை வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித்தொகை என பல கவர்ச்சியான வாக்குறுதிகள் தவெக சார்பில் தரப்பட்டன. மக்கள் அந்த வாக்குறுதிகளை இன்னும் நினைவில் வைத்திருக்கிறார்கள். அவற்றில் சிலவற்றையாவது முதல் கையெழுத்திலேயே நிறைவேற்றுவீர்கள் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். நடைமுறைக்கு சாத்தியமான வாக்குறுதிகளை நான் வழங்குகிறேன் என்று கூறியிருந்தீர்கள்.
அதை செயல்படுத்தி காட்ட வேண்டிய நேரம் இது. 2021ம் ஆண்டு மிகக் கடுமையான சூழ்நிலையில் நாங்கள் ஆட்சி ஏற்றோம். ஆனால் மக்கள் நலத்திட்டங்களை நிறுத்தாமல் தொடர்ந்து செயல்படுத்தினோம். அதேபோல் இந்த அரசும் மக்கள் நலனில் அக்கறை கொண்டு செயல்பட வேண்டும். இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ஆட்சியாக இல்லாமல் ரியல் ஆட்சியாக இருக்க வேண்டும். அதைத்தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று உதயநிதி ஸ்டாலின் பேசினார்.





