நடிகர் அஜீத்குமார் நடித்த விடாமுயற்சி படம் படுதோல்வியை சந்தித்த நிலையில், அடுத்து அவர் நடித்த குட் பேட் அக்லி படம் வருகிற ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸாகிறது. இந்த படத்தை மார்க் ஆண்டனி பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி உள்ளார். இந்த படத்தின் டீசர் கடந்த வாரத்தில் வெளியாகி 24 மணி நேரத்தில் 32 மில்லியன் பார்வையாளர்களை கடந்த சாதனை படைத்தது.
இந்த படத்தில் 3 கேரக்டர்களில் அல்லது 3 கெட்டப்களில் வரும் அஜீத்குமாரின் மாஸ் என்ட்ரியை பார்த்து அஜீத்குமார் ரசிகர்கள் ஏகப்பட்ட உற்சாகத்தில் இருக்கின்றனர். விடாமுயற்சி படம் தந்த தோல்விக்கு பலமடங்கு பதிலடி தரும் விதமாக குட் பேட் அக்லி படம் பெரிய சம்பவத்தை தமிழ் சினிமாவில் நடத்திக் காட்டும் என்றும் உற்சாகத்தில் இருந்து வருகின்றனர்.
இந்த சூழலில் வருகிற மே 1ம் தேதி கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த ரெட்ரோ படம் ரிலீஸாக உள்ளது. தொடர்ந்து தோல்வி படங்களை தந்து துவண்டு போயிருக்கும் நடிகர் சூர்யாவுக்கு நிச்சயமாக இந்த படம் பெரிய வரவேற்பை வெற்றியை பெற்றுத் தரும் என்று தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் குட் பேட் அக்லி படத்தின் கதை இதுதான் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஆரம்பத்தில் பெரிய ரவுடியாக டான் ஆக இருக்கும் அஜீத்குமார் பெரிய பெரிய சம்பவங்களை எல்லாம் செய்துவிட்டு, ஒரு கட்டத்தில் அதில் இருந்து முற்றிலும் விலகி, அமைதியான குடும்ப வாழ்க்கைக்கு திரும்புகிறார்.
ஆனால் கடந்த காலத்தில் அவர் செய்த சம்பவங்கள், வன்முறைகள் மீண்டும் அவரை துரத்துவதால் ஏற்படும் பிரச்னைகளே இந்த படத்தின் கதையாக உள்ளது. நடிகர் சூர்யா நடித்துள்ள ரெட்டோர படத்திலும், கேங்ஸ்டராக இருந்து பல தரமான சம்பவங்களை செய்யும் நிலையில், ஒரு கட்டத்தில் நாயகி பூஜா ஹெக்டேவை காதலித்து அவரை திருமணம் செய்துக்கொள்ள விரும்புகிறார்.
அப்போது அவரை அமைதியான குடும்ப வாழ்க்கை வாழ விடாமல், கடந்த காலத்தில் அவர் செய்த பிரச்னைகளே மீண்டும் அவரது வாழ்க்கையில் பிரச்னைகளை ஏற்படுத்த மீண்டும் கேங்ஸ்டராக மாறுவதே கதை என்கின்றனர். அப்படி பார்த்தால் இந்த 2 படங்களின் கதையும் ஒரே மாதிரி இருக்கிறதே என்று அஜீத்குமார், சூர்யா ரசிகர்கள் இதென்னடா வம்பா போச்சு என்று குழப்பத்தில் உள்ளனர்.





