நடிகர் சூர்யா, சமீபகாலமாக அவரது வெற்றிப் படங்கள் எதுவும் வரவில்லை. சுதா கொங்காரா இயக்கிய சூரரைப் போற்று படத்துக்கு பிறகு சூர்யா நடிப்பில் வெளிவந்த ஓரிரு படங்களும், அவரது ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தையே தந்தன. இந்நிலையில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது 44வது படத்தில் நடிக்க உள்ளார் சூர்யா.
சூர்யாவை பொருத்த வரை துவக்கத்தில், இயக்குனர்களின் ஹீரோவாக அவர் இருந்தார். இயக்குனர்கள் சொல்கிற கதையில், காட்சிகளில் அவர்கள் சொல்கிறபடி நடித்து வெற்றிப் படங்களை கொடுத்தார். ஆனால் சமீபகாலமாக அவர், திரைக்கதையில் மூக்கை நுழைப்பது, கதையில் திருத்தங்கள், மாற்றங்கள் சொல்வது என அத்துமீறல் செய்வதாக புகார்கள் எழுந்துள்ளன.
குறிப்பாக சுதா கொங்காரா இயக்கத்தில் புறநானூறு படத்தில் நடிக்க வேண்டிய சூர்யா, கதையில் சொன்ன திருத்தங்களையும், மாற்றங்களையும் கேட்டு இயக்குனர் சுதா கொங்காரா, அதிர்ச்சியின் உச்சத்துக்கே போய்விட்டார். ஏனெனில் படத்தின் அடிப்படை கருவையே வேறுவிதமாக மாற்றும் வகையில், கதையில் மாற்றமும், திருத்தமும் செய்துள்ளார் சூர்யா.
அதன்பிறகுதான், அந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பையே சூர்யா இழந்தார். புறநானூறு படம் இயக்கும் திட்டத்தையே கைவிட்ட சுதா கொங்காரா இப்போது விக்ரம் நடிக்கும் படத்தையும், அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் இயக்குவதற்கான ஆயத்தப் பணிகளில் ஆர்வமாக இருந்து வருகிறார். விரைவில் இதற்கான அறிவிப்புகள் வெளியாக உள்ளது.
இந்நிலையில், இயக்குனர் பாலாவின் வணங்கான் படத்தையும், அதையடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தையும் தவற விட்டுள்ள நடிகர் சூர்யா, இப்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது 44வது படத்தில் நடிக்கிறார். இதற்காக அந்தமான் சென்றுள்ள டைரக்டர் கார்த்திக் சுப்பராஜ், லொகேஷன்களை செலக்சன் செய்துள்ளார். வரும் ஜூனில் படப்பிடிப்பு அந்தமானில் துவங்க இருக்கிறது.
இதற்கிடையே இந்த படத்தில் வில்லனாக நடிப்பவர் யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் வில்லன் ரோலில் நடிப்பது நடிகர் உறியடி விஜயகுமார்தான் என்பது உறுதியாகி உள்ளது. சமீபத்தில் இவரது நடிப்பில் எலக்சன் என்ற படம் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. சூர்யா போன்ற மாஸ் ஹீரோவுக்கு, உறியடி விஜயகுமார் போன்ற இளம் ஹீரோ நடிகரை வில்லனாக போட்டால் எடுபடுமா, என சூர்யா ரசிகர்களே புலம்பி வருகின்றனர்.





