நடிகர் வடிவேலு, துவக்கத்தில் என் ராசாவின் மனசிலே, சின்னக்கவுண்டர், மகராசன், சிங்காரவேலன், தேவர் மகன் போன்ற படங்களில் நடித்த வகையில், ஒரு காமெடி நடிகராக ரசிகர்கள் மத்தியில் அறியப்பட்டவர். தேவர் மகன் படத்தில் இசக்கி கேரக்டரில் நடித்த பிறகு தொடர்ந்து படங்களில் நடித்தார்.
குறிப்பாக வி சேகர் இயக்கிய வரவு எட்டணா செலவு பத்தணா, காலம் மாறிப் போச்சு, பொங்கலோ பொங்கல், விரலுக்கேத்த வீக்கம் போன்ற படங்கள் வடிவேலுவுக்கு நல்ல அடையாளத்தை பெற்றுத் தந்தது. அதிலும் கோவை சரளா ஜோடியாக நடித்தது, தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல அங்கீகாரத்தை கொடுத்தது.
அதன்பிறகு காமெடி நடிப்பில் வடிவேலு, மிகப் பெரிய அளவில் பிரபலமடைந்தார். குறிப்பாக 1990களில் கவுண்டமணி, செந்தில் காமெடி குறைந்த போது, வடிவேலு காமெடி பெரிய அளவில் பிரபலமானது. சந்திரமுகி போன்ற படங்களில் வடிவேலு நடித்த போது, அவரது கால்ஷீட் கிடைப்பதே பெரிய விஷயமாக பார்க்கப்பட்டது.
இம்சை அரசன் 23ம் புலிகேசி, இந்திரலோகத்தில் நா அழகப்பன், தெனாலிராமன், எலி போன்ற படங்களில் ஹீரோவாக நடித்த அவர், ஒரு காலகட்டத்தில் நடிகர் விஜயகாந்தை எதிர்த்தார். திமுக மேடைகளில் கேப்டன் விஜயகாந்த் குறித்து தாறுமாறாக விமர்சித்தார். இந்த பிரச்னையில், அவரது சினிமா வாழ்க்கை அஸ்தமனத்தை சந்தித்தது.
இதனால் 10 ஆண்டுகளுக்கு மேலாக நடிக்காமல் இருந்த வடிவேலு, இப்போது 2வது சுற்றாக, நடித்து வருகிறார். ஆனால் முன்பு போல அவரது காமெடி நடிப்பு ரசிகர்களை கவரவில்லை. ஆனால் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் வடிவேலு குணச்சித்திர நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஆனால் அதுபோன்ற கேரக்டர்களில் தொடர்ந்து நடிக்க மறுக்கிறார் நடிகர் வடிவேலு.
இந்நிலையில், 2வது சுற்றில் நடிகர் வடிவேலு அதிக படங்களில் நடிக்காதது ஏன் என்ற கேள்விக்கு இப்போது விடை கிடைத்துள்ளது. அதாவது ஒரு படத்தில் நடிக்க தனக்கு சம்பளமாக ரூ. 6 கோடி கேட்கிறார். படத்தின் பட்ஜெட்டே 8 கோடி ரூபாய் என்ற நிலையில், சமீபத்தில் அவரிடம் கால்ஷீட் கேட்கப் போன தயாரிப்பாளர் ஒருவர், அவர் கேட்ட சம்பளத்தை கேட்டு துண்டை காணோம், துணியை காணோம் என பதறிப் போய் திரும்பி ஓடி வந்திருக்கிறார். இமேஜ் இல்லே, மார்க்கெட் இல்லே, இப்ப 6 கோடி சம்பளமா, மாப்பு வெச்சுட்டாண்டா ஆப்பு என்று கிண்டல் செய்கின்றனர் ரசிகர்கள்.





