கவிஞர் வைரமுத்து தமிழ் சினிமாவில் ஆளுமை மிக்க ஒரு கவிஞர். பாடலாசிரியர். எழுத்தாளராக கொண்டாடப்படுபவர். அவரது வரிகளில், எஸ்பிபி, ஜேசுதாஸ் பாடிய பாடல்கள் என்றால், நாள் முழுக்க கேட்டுக்கொண்டே இருக்கலாம். அதுமட்டுமின்றி அவர் எழுதிய கவிதை நூல்கள், உரைநடை நூல்களும் மிகச் சிறந்த படைப்புகளாகவே பார்க்கப்படுகின்றன.
உதாரணமாக தண்ணீர் தேசம், கருவாச்சி காவியம், கள்ளிக்காட்டு இதிகாசம், மூன்றாம் உலகப் போர், மீண்டும் என் தொட்டிலுக்கு, இந்த குளத்தில் கல் எறிந்தவர்கள், வைகறை மேகங்கள், வில்லோடு வா நிலவே என பல நல்ல படைப்புகளை தந்திருக்கிறார். விரைவில் அவர் எழுதிய மகாகவிதை என்ற புதிய நூல் வெளியாக இருக்கிறது. இதை தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட இருக்கிறார்.
சமீபத்தில் கட்டில் என்ற படத்தின் பிரமோசன் நிகழ்ச்சி நடந்தது. இந்த படத்தை பிரபல எடிட்டர் பி. லெனின் கதை, திரைக்கதை எழுதி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கணேஷ்பாபு என்பவர் இயக்கி, நடித்துள்ளார். இந்த படத்தின் பிரமோசன் நிகழ்ச்சியில் பங்கேற்ற கவிஞர் வைரமுத்து பல விஷயங்களை மனம் திறந்து பேசினார்.
அப்போது வைரமுத்து கூறியதாவது, கட்டில் போன்ற சிறிய பட்ஜெட் படங்கள் வருவது, தமிழ் சினிமாவுக்கு மிக முக்கியம். அப்போது, பல புதிய கலைஞர்கள் தமிழ் சினிமாவுக்கு கிடைப்பார்கள். பெரிய படங்களை திட்டமிட்டு பார்க்க வைக்கின்றனர்.
பழைய படங்களின் சினிமா போஸ்டர்களை பார்த்தால், அதில் பெண்கள் தெரிவார்கள். ஆனால் இப்போது தமிழ் சினிமாவில் அதிகமாக பெண்களை பார்க்க முடிவதில்லை. பெண்கள் அதிகமாக இருந்த காலம்தான், சினிமாவின் பொற்காலம்.
கண்ணதாசன், வாலி ஆகியோருடன் நான் போட்டியிட்டேன். அவர்களிடம் ஜெயிக்க முடியாது என்று தெரிந்தும், அவர்களோடு நானும் இருக்கிறேன் என்பதற்காக நின்றேன். நான் என் மகன் மதன் கார்க்கியை வௌிநாடு அனுப்பி வைத்தேன். அங்கு அவர் விஞ்ஞானம் படித்துவிட்டு வந்து பேராசிரியர் ஆனார். இப்போது இந்த படத்தில் எனக்கு போட்டியாக அவர் அருமையான வரிகள் கொண்ட பாடல்கைள எழுதி இருக்கிறார். இவர் எனக்கு போட்டியாளராக வருவார் என நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை, என நகைச்சுவையாக பேசி இருக்கிறார் வைரமுத்து.





