தமிழ் சினிமா பாடலாசிரியர்களில் வைரமுத்து எப்போதும் தனித்துவமானவர். நிழல்கள் படத்தில் இடம்பெற்ற இது ஒரு பொன்மாலை பொழுது பாடலின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானார். முதல் பாட்டிலேயே பல சிறந்த வரிகளை எழுதி ரசிகர்கள் மனதிலும், இளையராஜாவின் மனதிலும் அழுத்தமான தடத்தை பதித்து இடம் பிடித்துவிட்டார். அதன் பிறகு தொடர்ந்து இளையராஜாவின் இசையில் பாடல்களை எழுத ஆரம்பித்தார்.
அப்போதிருந்து பாரதிராஜா – இளையராஜா – வைரமுத்து என்ற மேஜிக் கூட்டணி உருவாக ஆரம்பித்தது. அதன்படி அவர்கள் இணைந்த மண் வாசனை, முதல் மரியாதை, கடலோரக் கவிதைகள் உள்ளிட்ட படங்களின் பாடல்கள் மெகா ஹிட்டடித்தன. மெகா ஹிட் என்பதை தாண்டி இன்றுவரை அனைவராலும் கொண்டாடப்படும் க்ளாசிக் பாடல்களாக இருக்கின்றன.
இடையில் யார் கண் பட்டதோ தெரியவில்லை இளையராஜா – வைரமுத்து கூட்டணி உடைந்தது. அதற்கு காரணமக பலர் பல விஷயங்களை கூறினாலும் உண்மையான காரணம் என்ன என்பது குறித்து இதுவரை யாருக்கும் தெரியவில்லை. அதேசமயம் அவர்களை இணைத்து வைக்க பாரதிராஜா உள்ளிடோரும் முயன்றனர். ஆனால் இன்றுவரை அந்த முயற்சி வெறும் முயற்சியோடு மட்டுமே நிற்கிறது.
சில வருடங்களுக்கு முன்னர் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் வைரமுத்துவிடம் கோபிநாத் மீண்டும் இளையராஜா – வைரமுத்து கூட்டணி அமையுமா என்று கேட்ட கேள்விக்கு வைரமுத்து பட்டும் படாமல் பதில் சொல்லி நகர்ந்தார். இதற்கிடையே ஏ.ஆர்.ரஹ்மானுடன் கூட்டணி வைத்து அட்டகாசமான பாடல்களை கொடுத்தார் வைரமுத்து. ஆனால் ஒரு சில பிரச்னைகளால் அந்தக் கூட்டணியும் உடைந்துபோனது. அதற்கு காரணம் சின்மயி வைத்த மீ டூ புகார்தான் என்றும் கூறப்படுகிறது.
நிலைமை இப்படி இருக்க சமீப காலமாக இளையராஜா குறித்து வைரமுத்து பொதுவெளிகளில் பேசிவருகிறார். திருவின் குரல் பட நிகழ்ச்சியில்கூட தமிழர்களின் பண்பாட்டை இன்னும் நூறு வருடங்கள் கழித்து தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் இளையராஜாவின் இசையை கேட்டால் போதும் என ஓபனாகவே பேசியிருந்தார். இதனால் இளையராஜாவுடன் சமாதானமாக போக வைரமுத்து விரும்புகிறார் என்ற பிம்பம் உருவாகியிருக்கிறது.
இந்நிலையில் பாரதிராஜாவை வைரமுத்து சந்தித்திருக்கிறார். அதுதொடர்பான வீடியோவையும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். பாரதிராஜாவும், வைரமுத்துவும் இன்றுவரை நட்போடு இருப்பதால் இந்த சந்திப்பு பெரிய ஆச்சரியமில்லை என தோன்றலாம். ஆனால் அதில் ஒரு ஆச்சரியம் இருக்கிறது. ஆம் பாரதிராஜாவை சந்தித்த வைரமுத்து இளையராஜா நாயகன் படத்தில் இசையமைத்த தென்பாண்டி சீமையிலே பாடலின் ட்யூனுக்கு பாரதிராஜாவை புகழ்ந்து வரிகள் எழுதியிருக்கிறார்.
எழுந்து வா இமயமே!@offBharathiraja | #பாரதிராஜா pic.twitter.com/AqqZjN0DTA
— வைரமுத்து (@Vairamuthu) August 1, 2023
அதை அவரே பாரதிராஜாவிடம் பாடியும் காண்பிக்கிறார். இந்த வீடியோவை பார்த்து ஆச்சரியப்பட்ட பலரும் 40 வருடங்கள் கழித்து இளையராஜா இசைக்கு வைரமுத்து பாடல் எழுதியிருக்கிறார் என பகிர்ந்து அதை ட்ரெண்டாக்கிவருகின்றனர்.





