ஓவர் பில்டப்பு ஒடம்புக்கு ஆகாது தம்பி என்ற டயலாக்கை, இயக்குனர் வெங்கட்பிரபுவை பார்த்து நெட்டிசன்களும், ரசிகர்களும் கூற ஆரம்பித்திருக்கின்றனர். தி கோட் படம் குறித்து பல பில்டப்புகளை படக்குழுவினர் கூறிவந்த நிலையில், இது பழைய சரக்கில் இருந்து எடுத்து போட்ட உருட்டுதான் என்ற உண்மை வெளிவந்துள்ளது.
தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரு நாள் மட்டும் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதித்துள்ள நிலையில், இன்று 5 காட்சிகளாக தி கோட் படம் திரையிடப்பட்டு வருகிறது. படம் நன்றாக இருப்பதாக பலரும் பாராட்டி வருகின்றனர்.
படத்தின் கதைச்சுருக்கம் என்னவென்றால், ஜெயராம் தலைமையில் ஒரு ஸ்குவாடு டீமில் ஏஜண்டுகளாக செயல்படுபவர்கள் விஜய், பிரசாந்த், பிரபுதேவா மற்றும் அஜ்மல். ஒரு பிரச்னையில் மைக் மோகன் குடும்பத்தை விஜய் பழிவாங்கி விடுவதால், அவரது மகனை வில்லன் மைக் மோகன் கடத்திச் செல்கின்றார்.
வில்லன் பராமரிப்பில் வளரும் விஜய் வில்லனாக மாறி, தன் தந்தையை எதிர்ப்பதுதான் இந்த படத்தின் கதை. ஆனால் இதே கதையை பல ஆண்டுகளுக்கு முன் விஜயின் அப்பா எஸ்ஏ சந்திரசகேர் இயக்கி உள்ளார். கடந்த 1993ம் ஆண்டில் வெளியான ராஜதுரை என்ற இந்த படத்தில் விஜயகாந்த் அப்பா, மகன் என்ற 2 வேடங்களில் நடித்திருப்பார்.
போலீஸ் அதிகாரியான ராஜதுரை விஜயகாந்துடன் மோதும் வில்லன் ஆனந்தராஜ், ஒருகட்டத்தில் விஜயகாந்தின் மகனை கடத்திக்கொண்டு போய் வளர்த்து அவரையே தன் தந்தை விஜயகாந்துக்கு எதிரானவராக மாற்றி பிரச்னையை உண்டு பண்ணுவார். அதில் மகனாக நடித்திருந்ததும் விஜயகாந்த் தான்.
ஆக, விஜயகாந்த் அப்பா மகன் கேரக்டர்களை விஜய் அப்பா, மகன் கேரக்டர்களாக மாற்றி, அதில் விஜய் மகன் விஜயை வில்லனாக்கி பழைய சாதத்தை பிரைடு ரைஸ் ஆக சூடு பண்ணி, நட்சத்திர பட்டாளங்களை சிக்கன் மசாலாவாக சேர்த்து தந்திருக்கிறார் வெங்கட்பிரபு. கடைசியில் விஜய் அப்பா எடுத்த படத்திலேயே வெங்கட்பிரபு ஆட்டைய போட்டிருக்காரே என்ற குட்டு வெளிப்பட்டு விட்டது. இதை நெட்டிசன்கள் பங்கம் செய்து வருகின்றனர்.





