தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்து பிறகு ஹீரோவாக மாறியவர் நடிகர் சூரி. வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தில் அவர் நாயகனாக நடித்திருந்தார். தொடர்ந்து கருடன் விடுதலை 2 கொட்டுக்காளி மாமன் போன்ற படங்களில் சூரி நடித்த நிலையில் அவருக்கு நல்ல வரவேற்பும் ஆதரவும் ரசிகர்களிடம் கிடைத்தது.
இப்போது மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் மண்டாடி என்ற படத்தில் சூரி நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. அடுத்து அயலான் பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சூரி நடிக்க உள்ளார். சூரி ஹீரோவான பிறகு படத்தின் பிரமோசன் நிகழ்ச்சிகளில் பேசும்போது தனது கடந்த காலம் குறித்து பல விஷயங்களை சொல்கிறார்.
குறிப்பாக நடிகர் ஆவதற்கு முன்பு சென்னையில் அவர் பட்ட கஷ்டங்கள், கட்டடங்களுக்கு பெயிண்ட் அடித்தது, திருப்பூரில் 7 ஆண்டுகள் தொழிலாளியாக வேலை பார்த்தது குறித்து தொடர்ந்து பேசி வருகிறார். சென்னையில் பல இடங்களில் கட்டடங்களுக்கு வெள்ளயைடித்ததாக சூரி தொடர்ந்து கூறுகிறார்.
சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த பூ காய் கனி பட இயக்குனர் வெற்றி வீரன் மகாலிங்கம் நடிகர் சூரி குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். ரசிகர்களின் அனுதாபத்தை ஆதரவை பெற வேண்டும் என்பதற்காக சூரி தனது படங்களின் பிரமோசன்களின் போது கட்டுக்கதைகளை சொல்லி வருகிறார். சிம்பதி கிரியேட் செய்கிறார் என்றும் அவர் குற்றம் சாட்டியிருக்கிறார்.
இதுகுறித்து இயக்குனர் வெற்றிவீரன் கூறியதாவது, ரெண்டே ரெண்டு நாள் தான் சூரியை பெயிண்ட் அடிக்க நான் கூட்டிட்டு போனேன். ஆனால் சென்னையில் இருக்கிற எந்த பில்டிங் பார்த்தாலும் அவர் வெள்ளையடிச்சது நினைவுக்கு வருதுன்னு சொல்றார். அது எல்லாம் கட்டுக்கதையா இல்லையா? 9 வருஷம் நானும் சூரியும் ரூம் மேட்ஸ். நீ எந்த அடுக்குமாடி கட்டடத்தில் தொங்கிட்டு பெயிண்ட் அடிச்சேன்னு சொல்லு.
விருகம்பாக்கத்தில் ஒரு இடத்துல பெயிண்ட் அடிச்சோம். அம்பத்தூரில் ஒரு ஸ்கூலுக்கு ஒரு வாரம் அங்கேயே தங்கி பெயிண்ட் அடிச்சோம். இது ரெண்டுதான் வாழ்க்கையில நடந்தது. சூரி மேல அனுதாபம் வரணும்ன்னு இப்படி எல்லாம் சொல்றார். அய்யோ சூரி இவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறார் என்று ரசிகர்கள் நினைக்கணும். அதுக்கு எதுக்கு கட்டுக்கதையா அவுத்து விடுறே? கட்டுக்கதை சொல்றதை நிப்பாட்டிக்கோ. ஜெயிச்சதோட நிப்பாட்டிக்கோ என்று பூ காய் கனி பட இயக்குனர் வெற்றி வீரன் கூறியிருக்கிறார்.





