தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனராக கொண்டாடப்படுவர் இயக்குனர் ஷங்கர். ரஜினி கமல் விஜய் சியான் விக்ரம் பிரபுதேவா உள்ளிட்ட முன்னணி ஹீரோக்கள் நடித்த வெற்றிப் படங்களை இயக்கியவர். ஷங்கர் இயக்கிய படங்கள் என்றாலே கமர்ஷியலாகவும் இருக்கும். ரசிகர்களின் கவனத்தையும் ஈர்க்கும் கதைக்களமாகவும் இருக்கும்.
அந்த வகையில் இந்தியன் சிவாஜி முதல்வன் அந்நியன் காதலன் நண்பன் உள்ளிட்ட படங்கள் பெரிய அளவில் மாஸ் ஹிட் படங்களாக இருந்தன. ஆனால் கடந்தாண்டில் வெளியான இந்தியன் 2 படம் பலத்த தோல்வியை சந்தித்தது. ஷங்கர் இதுபோன்ற மோசமான தோல்வியை ஒருமுறை கூட அவரது சினிமா பயணத்தில் சந்திக்கவில்லை.
இந்த சூழலில் ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம்சரண் பாலிவுட் நாயகி கியாரா அத்வானி மற்றும் அஞ்சலி சமுத்திரக்கனி எஸ்ஜே சூர்யா உள்ளிட்டோர் நடித்த கேம் சேஞ்சர் படம் நேற்று வெளியானது. ஆர்ஆர்ஆர் படத்துக்கு பிறகு 3 ஆண்டுகள் கழித்து ராம்சரண் நடிப்பில் வெளியான படம் இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பும் இருந்தது.
அதே போல் கடந்த 2016ம் ஆண்டில் இயக்குனர் பாலா இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த படம் தாரை தப்பட்டை. இதில் சசிக்குமார் வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். 8 ஆண்டுகளுக்கு பின் பாலா இயக்கத்தில் சூர்யாவுக்கு பதிலாக அருண்விஜய் நடித்த இந்த படம் மீதும் பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருந்தது.
இந்நிலையில் நேற்று வெளியான கேம் சேஞ்சர் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் இருந்து வருகின்றன. வழக்கமான ஷங்கர் படம்தான், இதில் வித்யாசம் எதுவுமில்லை, பாடல் காட்சிகளுக்கு ரூ. 75 கோடி வரை செலவு அவசியமில்லை என்று ஒரு தரப்பு ரசிகர்கள் கூறியிருக்கின்றனர். ஆனால் வணங்கான் படம் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.
கேம் சேஞ்சர் படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ. 80 கோடிக்கு மேல் வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே போல் வணங்கான் படம் முதல் நாளில் ரூ. 1.5 கோடி வரை வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. பொங்கல் பண்டிகை நாளை துவங்குவதால் வணங்கான் வசூல் கணிசமாக வரும் நாட்களில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





