தங்கலானைத் தொடர்ந்து விக்ரம் வீர தீர சூரன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளார். பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா போன்ற அருமையான படங்களை எடுத்த அருண்குமார் தான் இதனை இயக்கியிருக்கிறார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த திரைப்படம் மார்ச் 27ஆம் தேதி அதாவது கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது.
ஆனால் படத்தின் ரிலீஸ்சே பட குழுவினருக்கு மிகப்பெரிய போராட்டமாக அமைந்தது. தயாரிப்பு நிறுவனத்துடன் பங்கு வைத்த ஒரு நிறுவனம், கடைசி நேரத்தில் படத்திற்கு தடை கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு செல்ல வீரதீர சூரனின் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து படம் நான்கு வாரங்களுக்கு வெளியிட தடையும் செய்யப்பட்டது.
பிறகு உடனடியாக வழக்கு தொடர்ந்த நிறுவனத்துடன் கலந்து பேசி ஒரு முடிவுக்கு வந்தார்கள். இதனைத் தொடர்ந்து அன்றைய தினம் மாலையில் தான் வீர தீர சூரன் திரைப்படம் வெளியானது. ஏற்கனவே இந்த திரைப்படத்தின் டீசர் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்திருந்தது.
அதுவும் கைதி திரைப்படத்தைப் போன்றே ஒரே நாள் இரவில் காட்சிகள் எடுக்கப்பட்டிருந்ததால் பலரும் வீர தீர சூரனை திரும்பிப் பார்த்தார்கள். இதில் காளி என்னும் கதாபாத்திரத்தில் விக்ரம் நடிக்க அவருக்கு துணைவியாக கலைவாணி என்னும் கதாபாத்திரத்தில் நடித்தார் துஷாரா விஜயன். எஸ் ஜே சூர்யா சூராஜ் உள்ளிட்டோரும் படத்தில் இடம்பெற்று இருந்த சூழலில் வீர தீர சூரன் நல்ல விமர்சனத்தை பெற்றது.
சிலர் படம் சரியில்லை குறிப்பாக இரண்டாம் பாதி எங்கெங்கோ நகர்கிறது என்று கருத்து தெரிவித்தாலும், அது ஒட்டுமொத்தமாக படத்தை பாதிக்கவில்லை என்றே கூற வேண்டும். குறிப்பாக இளவட்டாரங்கள் இந்த திரைப்படத்திற்கு வரவேற்பு தெரிவித்தனர். அதேசமயம் குடும்ப ஆடியன்ஸ்கள் தரப்பில் இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை.
முதல் நாளில் இரண்டு காட்சிகள் மட்டுமே திரையிடப்பட்டதால் வீரதீரசூரன் எட்டு கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்தது. பிறகு அடுத்தடுத்த நாட்களில் கூட்டம் சேர, தமிழகத்தில் மட்டும் அந்த திரைப்படம் ஐந்து நாட்களில் 34 கோடி வரை வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமை 22 கோடி ரூபாய்க்கு சென்று இருப்பதாக சொல்லப்படுகிறது. அப்படிப் பார்க்கையில் வீரதீரசூரன் லாபத்தையே கொடுத்திருப்பதாக பலரும் கூறி வருகிறார்கள். தமிழ் திரையுலகை தாண்டி உலக அளவில் ஒட்டுமொத்தமாக இந்த திரைப்படம் 45 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





