சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பாளர் ஆர்பி சௌத்ரி மகன்தான் நடிகர் ஜீவா. இவரது அண்ணன் ரமேஷ், ஜித்தன் ரமேஷ் என்று அழைக்கப்படுகிறார். தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களில் நடித்தவர் ஜீவா. குறிப்பாக ராம் சிவா மனசுல சக்தி கோ அரண் சிங்கம் புலி ரௌத்திரம் முகமூடி தெனாவெட்டு என பல வெற்றிப் படங்களில் நடித்தவர்.
குறிப்பாக ஷங்கர் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த படம் நண்பன். இதில் விஜய்க்கு கல்லூரி நண்பர்களாக ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் நடித்திருந்தனர். இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது. இப்போது நடிகர் ஜீவா நடிப்பில் அகத்தியா என்ற படம் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் பிரமோசன் நிகழ்ச்சியில் தொடர்ந்து நடிகர் ஜீவா பங்கேற்று வருகிறார்.
நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகர் ஜீவா கூறியதாவது, ஒரு விபத்து நடக்குது, அப்படி விபத்து நடந்தால் ஒருவருடைய மனநிலை எப்படி இருக்கும்? பயங்கர அதிர்ச்சியாக தான் இருக்கும். ரோட்டில் வண்டி ஒருபுறம் கவிழ்ந்து கிடந்தது. என்னோட பொருட்களை எல்லாம் காரில் இருந்து எடுத்துக்கிட்டு இருந்தேன்.
கொஞ்சம் பணம் இருந்தது. அதில் என்னோட பாஸ்போர்ட் இருந்தது. சேலத்துல இருக்கிற என்னோட ஆடிட்டரோ பிரண்ட் மீட் பண்ண போயிட்டு இருந்தேன். அந்த பரபரப்புல ஆக்சிடென்ட் நடந்திருச்சு. என்னோட பாஸ்போர்ட் தொலைஞ்சிட கூடாது. அடுத்த வாரம் நான் ஊருக்கு போக வேண்டிதாகவும் இருந்தது.
கார் விபத்து நடந்தது ஒரு மோசமான சூழ்நிலை. என்னுடைய 30 லட்சம் ரூபாய் கார் ரோட்டில் நொறுங்கி சிதைந்து கிடக்கிறது. எப்படி இன்சூரன்ஸ் கிளைம் பண்றதுன்னு தெரியலே. எப்படி சேலம் போகப் போறேன்னு தெரியலை. அப்போ என்னோட பாஸ்போர்ட்டை நான் அவசரமா தேடி எடுத்துக்கிட்டு இருக்கிறேன்.
அப்போது, முகத்துல இருக்கிற மாஸ்க்கை எடுத்துட்டு, ஒரு குவாட்டர் சொல்லு மச்சின்னு டயலாக் சொல்லுங்கன்னு ஒரு ஆள் வந்து என்கிட்ட கேட்டார். ஆக்ஸிடென்ட் ஆன இடத்துல, இவ்வளவு மோசமான ஒரு சூழ்நிலையில் நான் இருக்கிற புரிஞ்சுக்காம இப்படி இருக்காங்களேன்னு தான் நான் அப்போது கோபப்பட்டேன் என்று நடிகர் ஜீவா வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





