இசைஞானி இளையராஜாவின் தம்பி கங்கை அமரன். இவரது மூத்த மகன் வெங்கட் பிரபு. துவக்கத்தில் உன்னை சரணடைந்தேன், ஏப்ரல் மாதத்தில், சிவகாசி உள்ளிட்ட சில படங்களில் நடித்த வெங்கட் பிரபு, பெரிய அளவில் நடிகராக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற முடியவில்லை. இதையடுத்து அவர் இயக்குனராக அவதாரம் எடுத்தார்.
வெங்கட்பிரபு இயக்கிய முதல் படம் சென்னை 28 மிகப்பெரிய வெற்றியை பெற்றது. லோக்கல் கிரிக்கெட் போட்டியை மையப்படுத்தி, நண்பர்களுக்குள் நடக்கும் சண்டை மற்றும் காதலை கருவாகக் கொண்டு உருவாக்கிய இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இந்த படத்தை தொடர்ந்து கோவா, மங்காத்தா, மாசு என்கிற மாசிலாமணி, மாநாடு, சரோஜா போன்ற படங்களை இயக்கிய வெங்கட் பிரபு அடுத்ததாக இயக்கிய படம் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம். இந்த படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடங்களில் அப்பா, மகன் கேரக்டர்களில் நடித்திருக்கிறார். இம்மாதம் 5ம் தேதி இந்த படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது.
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்த இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். கடந்த 5ம் தேதி வெளியான இந்த படம், 3 வாரங்களை கடந்து 4வது வாரத்தில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் தி கோட் படம் இதுவரை ரூ. 440 கோடிக்கு மேல் வசூலித்ததாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டும் 200 கோடி ரூபாய் வசூலை நெருங்கி விட்டதாக கூறப்படுகிறது. தி கோட் படம் குறித்து ஆரம்பத்தில் எதிர்மறையான விமர்சனங்கள் இருந்தாலும், இந்த படத்தில் மகன் கேரக்டரில் விஜயின் வில்லன் நடிப்பு பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
இந்த படத்தில் மட்ட பாடலில் நடிகை திரிஷா கேமியோ ரோலில் குத்தாட்டம் போட்டிருந்தார். படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் நடித்திருந்தார். இந்த படத்தின் துவக்கத்தில் மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த் ஏஐ தொழில்நுட்பத்தின் ஒரு காட்சியில் வருவது போல் காட்டி இருந்ததும் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் விஜய் மட்டுமின்றி பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், அஜ்மல், யுகேந்திரன், சினேகா, லைலா, கனிகா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படம் ஜனரஞ்சக ரீதியாக ரசிகர்களின் மனதை கவர்ந்த படமாக இருந்தது.
இந்நிலையில் தி கோட் படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு, தற்போது ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் தி கோட் படம் இன்றுடன் 25வது நாளை நிறைவு செய்கிறது. அதற்காக ‘கடவுள் கருணையானவர்’. எங்களது தி கோட் படத்தை மெகா பிளாக்பஸ்டர் படமாக கொடுத்த ஒவ்வொருவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், என்று தனது எக்ஸ் பக்கத்தில் நடிகர் மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபு கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.





