இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன் வெங்கட்பிரபு. தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் ஏப்ரல் மாதத்தில் உன்னை சரணடைந்தேன் சிவகாசி உள்ளிட்ட சில படங்களில் வெங்கட்பிரபு நடித்தார். ஆனால் நடிகராக அவர் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற முடியவில்லை.
அதன்பிறகு சென்னை 28 படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். சென்னையில் லோக்கல் ஏரியா கிரிக்கெட் விளையாட்டை நண்பர்கள் மோதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடினர். இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது.
தொடர்ந்து படங்களை இயக்கிய வெங்கட்பிரபு கோவா சரோஜா மாசு என்கிற மாசிலாமணி மங்காத்தா மாநாடு என பல படங்களை டைரக்ட் செய்தார். கடைசியாக அவரது இயக்கத்தில் விஜய் நடித்த தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல்டைம் படம் வௌியாகி வணிக ரீதியாக பெரிய வெற்றியை பெற்றது. அதன்பிறகு இப்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை வெங்கட்பிரபு டைரக்ட் செய்ய உள்ளார்.
பராசக்தி படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இது ஒரு சயின்ஸ்பிக்சன் கதைக்களத்தில் உருவாகிறது. இந்த சூழ்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை செய்திருக்கிறார்.
அந்த பதிவில், நடிகர் சிவகார்த்திகேயனின் இந்த படம் நிச்சயம் வித்தியாசமான நகைச்சுவை படமாக இருக்கும். கதையைக் கேட்ட அவரும் தயாரிப்பு நிறுவனமும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். இதுவரை பார்க்காத எஸ்கேவை ரசிகர்கள் இந்த படத்தில் பார்க்கலாம் என்று அந்த பதிவில் வெங்கட்பிரபு கூறியிருக்கிறார்.
சிவகார்த்திகேயன், வெங்கட் பிரபு இருவரும் இப்போது கிராபிக்ஸ் தொழில்நுட்ப பணிகளுக்காக அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ்சில் இருக்கிறார்கள். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பெரிய பொருட்செலவில் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தி கோட் படத்தில் 2 விஜய் கேரக்டர் வந்தது போலவே இதிலும் சில தொழில்நுட்பங்களை வெங்கட்பிரபு பயன்படுத்த திட்டமிட்டுள்ளார்.





