மின்னலே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் கௌதம் மேனன். இதனைத் தொடர்ந்து காக்க காக்க, பச்சைக்கிளி முத்துச்சரம், வேட்டையாடு விளையாடு, விண்ணைத்தாண்டி வருவாயா, நடுநிசி நாய்கள், நீதானே என் பொன்வசந்தம், அச்சம் என்பது மடமையடா, என்னை நோக்கி பாயும் தோட்டா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை அவர் இயக்கினார்.
இதன் நடுவே துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் கதையை எழுதிய அவர், அதனை சூர்யாவை வைத்து இயக்க எண்ணினார். இதற்கான பணிகளும் கிட்டத்தட்ட முடிவுக்கு வர, சூட்டிங் ஆரம்பமான சமயத்தில் படத்திலிருந்து விலகினார் சூர்யா. இதன்பிறகு ரஜினியை வைத்து இந்த திரைப்படத்தை எடுக்க முடிவு செய்தார் கௌதம் மேனன். அவருக்காக கதையில் சிறு சிறு மாற்றங்களை செய்தார்.
சூப்பர் ஸ்டாருக்கும் அந்த கதை பிடித்துப் போக கடைசி நேரத்தில் ஏற்பட்ட குழப்பத்தால், ரஜினிகாந்த் அதில் நடிக்க முடியாமல் போனது. இதன் பிறகு துருவ நட்சத்திரத்திற்குள் விக்ரம் வந்தார். அது மட்டுமல்லாமல் சிம்ரன், ரித்து வர்மா, ராதிகா, விநாயகம், டான்ஸ் மாஸ்டர் சதீஷ், திவ்யதர்ஷினி உள்ளிட்டோரும் நடிக்க ஆரம்பித்தனர். 2018 ஆம் ஆண்டு இதற்கான வேலைகள் தொடங்கியது.
விக்ரம் இதில் ஜான் கதாபாத்திரத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. கோட் சூட் கூலிங் கிளாஸ் உடன் விமானத்திலிருந்து அவர் இறங்குவது போல வீடியோ வெளியாகி பலரையும் கவர்ந்தது. நீண்ட நாட்களாக பிரிந்து இருந்த கௌதம் மேனன் ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியும் இந்த திரைப்படத்தின் மூலம் இணைந்தது. சூட்டிங் போதே எதிர்பார்ப்பை இந்த படம் ஏற்படுத்தி இருந்த நிலையில், பொருளாதாரப் பிரச்சினை காரணமாக துருவ நட்சத்திரம் முடங்கியது.
படத்தை கௌதம் மேனனை தயாரிக்க செய்ததால், நிதி நெருக்கடியில் சிக்கிய அவர் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். விக்ரமும் மற்ற திரைப்படங்களில் கவனம் செலுத்த, கடந்த ஆண்டு பிரச்சனை பேசி முடிக்கப்பட்டு மீதி ஷூட்டிங் பணிகள் நடைபெற்றன. அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்த நிலையில் கடந்த 24 ஆம் தேதி படம் வெளியாவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் வேறொரு தயாரிப்பு நிறுவனத்திற்கு கௌதம் மேனன் பணம் கொடுக்க வேண்டி இருந்ததால், துருவ நட்சத்திரம் வெளியாகவில்லை.
இந்த நிலையில், கௌதம் மேனனுக்கு உதவுவதற்காக தயாரிப்பாளர் மதன் களத்தில் இறங்கி இருக்கிறாராம். இவர் துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராக இருக்க, நட்பின் அடிப்படையில் கௌதமுக்கு உதவ அவர் முன்வந்துள்ளாராம். அதே சமயம் இந்த பிரச்சனையே தனக்கு வேண்டாம் என்று விக்ரம் வெளிநாட்டுக்கு பறந்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கோடி கோடியாய் சம்பளம் வாங்கும் நடிகர் தன் படம் வெளியீட்டுக்கு இது கூட செய்ய மாட்டாரா என்று பலரும் விக்ரம் குறித்து கேள்வி கேட்டு வருகின்றனர்.





