கடந்த 2006 ஆம் ஆண்டு கமல்ஹாசன், ஜோதிகா, கமலினி முகர்ஜி, டேனியல் பாலாஜி ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “வேட்டையாடு விளையாடு”. கௌதம் வாசுதேவ் மேனன் இத்திரைப்படத்தை இயக்க, செவன்த் சேனல் மாணிக்கம் நாராயணன் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார்.

இத்திரைப்படம் இப்போதும் 90ஸ் கிட்ஸ்களின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக அமைந்துள்ளது. சமீபத்தில் கூட இத்திரைப்படத்தை திரையரங்குகளில் ரீரிலீஸ் செய்திருந்தனர். ரீரிலீஸ் செய்தபோதும் கூட அமோக வரவேற்பை இத்திரைப்படம் பெற்றிருந்தது.
“வேட்டையாடு விளையாடு” திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்ற திரைப்படமாக இருந்தாலும் அத்திரைப்படத்தினால் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணனுக்கு நஷ்டமே ஏற்பட்டது. அந்தளவுக்கு பல சிக்கல்களை இத்திரைப்படம் கடந்து வந்தது.

முதலில் “வேட்டையாடு விளையாடு” திரைப்படத்தை காஜா மைதீன் என்ற தயாரிப்பாளர்தான் தயாரிக்க தொடங்கினார். ஆனால் அவருக்கு பல பொருளாதார சிக்கல்கள் ஏற்பட்டதாக தெரிய வருகிறது. ஆதலால் அவரால் இத்திரைப்படத்தை மேற்கொண்டு உருவாக்க முடியவில்லை. மேலும் கடன் தொல்லையால் காஜா மைதீன் தற்கொலை செய்துகொள்ள விஷத்தை குடித்துவிட்டாராம். எனினும் அவரை காப்பாற்றிவிட்டார்கள்.
அதன் பின் காஜா மைதீனின் வேண்டுகோளுக்கு இணங்க இத்திரைப்படத்தை தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் கையில் எடுத்தார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இத்திரைப்படம் வெளியாகும் தருணத்தில் காஜா மைதீன் வாங்கிய கடன் தொகையை திரும்ப செலுத்தினால்தான் படம் வெளியாகும் என்ற நிலை வந்துவிட்டதாம்.

வாங்காத கடனை நான் ஏன் திரும்ப செலுத்த வேண்டும் என்று உடனே சம்பந்தப்பட்டவர்கள் மீது மாணிக்கம் நாராயணன் வழக்கு தொடுத்தாராம். அந்த வழக்கில் அவர் ஜெயித்தும் விட்டாராம். எனினும் ஒரு கட்டத்தில் அந்த கடன் தொகையை திரும்ப செலுத்தினால்தான் இத்திரைப்படம் வெளியாகும் என்ற நிர்பந்தம் வந்ததாம். ஆதலால் அந்த கடன் தொகையை மாணிக்கம் நாராயணன் செலுத்திவிட்டார். இதனால் இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றிருந்தாலும் தயாரிப்பாளருக்கு நஷ்டமே வந்திருக்கிறது.





