தமிழ் சினிமாவில் டாப் ஸ்டார் நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் அஜீத்குமார். தனக்கு வழங்கப்பட்ட அல்டிமேட் ஸ்டார் தல ஆகிய பட்டங்களை தவிர்த்துவிட்டு என்னை அஜீத்குமார் அல்லது ஏகே என்று சுருக்கமாக அழையுங்கள் என்று தன் ரசிகர்களுக்கு அறிவுறுத்தியவர். என் படம் பார்த்து ரசிப்பதோடு நிறுத்திக்கொள்ளுங்கள் என ரசிகர் மன்றங்களையும் கலைத்தவர்.
சமீபத்தில் கடவுளே அஜீத்தே என பொது இடங்களில் சிலர் கோஷமிடுவது குறித்து அறிக்கை வெளியிட்ட நடிகர் அஜீத்குமார், இதுபோன்ற தவறான செயல்களும், என்னை பற்றிய கோஷங்களும் பெரிய கவலையை எனக்கு தருகிறது. கட்டாயம் இப்படி கோஷமிடுவதை தவிர்த்து விடுங்கள் என்றும் வலியுறுத்தி இருந்தார்.
நடிகர் அஜீத்குமார் காட்டிய வழியில் சீனியர் நடிகர் கமல்ஹாசன், கடந்த நவம்பர் மாதம் வெளியிட்ட ஒரு அறிவிப்பில், என்னை இனிமேல் கமல்ஹாசன், கமல், கேஎச் என்று மட்டும் அழையுங்கள். உலக நாயகன், கலைஞானி, டாக்டர், பத்மஸ்ரீ என எந்த பட்டங்களை கொண்டும் அழைக்க வேண்டாம் என்று கமல் கூறியிருந்தார். ரஜினி, விஜய் போன்ற மற்ற நடிகர்களும் இதை பின்பற்ற வேண்டும் என்ற விமர்சனமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
துணிவு படத்துக்கு பிறகு 2 ஆண்டுகள் கழித்து அஜீத்குமார் நடித்த விடாமுயற்சி படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸாகிறது. வருகிற 10ம் தேதி இந்த படம் ரிலீஸாகும் என்று கூறப்பட்ட நிலையில், இப்போது அதில் திடீர் மாற்றம் செய்யப்படுவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இது ஏகே ரசிகர்களை விரக்தியடைய செய்துள்ளது. ஆனால் இதற்கு காரணம் அஜீத்குமார், டைரக்டர் மகிழ்திருமேனி உள்ளிட்ட படக்குழு காரணம் அல்ல.
விடாமுயற்சி படத்தை தயாரித்துள்ள லைகா புரடக்சன்ஸ் நிறுவனம்தான் என தெரிய வந்துள்ளது. 2020ம் ஆண்டில் லைகா தயாரிப்பில் வெளியான படங்கள் ரஜினிகாந்த், நயன்தாரா நடித்த தர்பார் மற்றும் தனுஷ், சினேகா நடித்த பட்டாஸ். தர்பார் படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்கி இருந்தார். பட்டாஸ் படத்தை துரை செந்தில்குமார் இயக்கி இருந்தார்.
2020ம் ஆண்டில் ஜனவரி 9ம் தேதி வெளியான தர்பார் படுதோல்வியடைந்தது. ரஜினி நடித்தும் பெரிய வெற்றியை பெறவில்லை. ஆனால் 14ம் தேதி வெளியான பட்டாஸ் படம் நல்ல வசூலை பெற்றது. அதனால் சென்டிமென்ட்டாக விடாமுயற்சி படத்தை ஜனவரி 10ம் தேதிக்கு பதிலாக 14ம் தேதி ரிலீஸ் செய்ய லைகா புரடக்சன்ஸ் ஆலோசித்து வருகிறது. படம் நல்லா இருந்தா ஓடப் போகுது, தேதியில் என்ன இருக்குது என ஏகே ரசிகர்கள் விரக்தியாக புலம்புகின்றனர்.





