தெலுங்கு இயக்குனர் ராம் கோபால் வர்மா இயக்கத்தில் சூர்யா நடித்த திரைப்படம் ரத்த சரித்திரம். தெலுங்கு திரையுலகில் சூர்யாவுக்கு மிகப்பெரிய மார்க்கெட்டை இந்த திரைப்படம் கொடுத்தது. இந்தப் படத்தின் தமிழ் டப்பிங்கில், வசனம் எழுதியதன் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார் ஞானவேல். தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு ராதா மோகன் இயக்கத்தில் வெளிவந்த பயணம் திரைப்படத்திற்கும் ஞானவேல் தான் வசனம் எழுதினார்.
இதனைத் தொடர்ந்து பிரகாஷ்ராஜ் இயக்கத்தில் வெளியான தோனி திரைப்படமும், ஞானவேலின் வசனத்திலேயே வெளிவந்தது. இப்படியான சூழலில், கூட்டத்தில் ஒருத்தன் என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அவர் அவதாரம் எடுத்தார். அசோக் செல்வன் நடிப்பில் உருவான இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றாலும் வசூல் குவிக்க தவறியது.
இந்த நிலையில், சூர்யாவை வைத்து ஜெய் பீம் திரைப்படத்தை அவர் இயக்கினார். உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், ரசிகர்களின் நெஞ்சை உலுக்கியது. பொய் வழக்கு போடுவதன் மூலம் இருளர் சமூக மக்கள் எந்த அளவு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை எவ்வித சமரசமும் இல்லாமல் காட்சிக்கு காட்சி அழுத்தத்துடன் பதிவு செய்திருந்தார் ஞானவேல்.
மணிகண்டன் மற்றும் லிஜோமல்தாஸ் ஆகியோர் சிறப்பாக நடித்திருந்ததால் பட்டித் தொட்டி எங்கும் பேசப்பட்டது ஜெய் பீம் திரைப்படம். ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகி இருந்தாலும், பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் பேசப்பட்டது. இந்த திரைப்படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பால், ரஜினிகாந்தை இயக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார் ஞானவேல். என்கவுண்டரை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்படுகிறது.
இந்தத் திரைப்படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப்பச்சன், பகத் பாசில், ராணா, துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர் என ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். லைக்கா நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறது. அனிருத் இதற்கு இசையமைக்கிறார். ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு சமீபத்தில் இதன் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது. அதுமட்டுமில்லாமல் படத்திற்கு வேட்டையன் என பெயரிடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
இதில் ரஜினிகாந்த் பேசும் குறி வச்சா இரை விழனும் டயலாக் நல்ல ரீச் ஆனது. இதன் சூட்டிங் திருவனந்தபுரத்தில் தொடங்கி திருநெல்வேலி, மும்பை, சென்னை ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்டது. தற்போது அடுத்ததாக தூத்துக்குடியில் படத்தை எடுக்க ஞானவேல் திட்டமிட்டுள்ளாராம். நாளைய அதற்கான பணிகள் தொடங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் தென் மாவட்ட பின்னணியில் இந்த படம் உருவாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.





