வெற்றிமாறன் இயக்கத்தில் அண்மையில் வெளிவந்த திரைப்படம் விடுதலைப் படத்தின் இரண்டாம் பாகம். இதன் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கு நீண்ட காலம் எடுத்துக் கொண்டார் இயக்குனர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம், கலவையான விமர்சனத்தையே பெற்றது.
குறிப்பாக படத்தின் பிரச்சார நெடி அதிகம் இருந்ததாகவும், முதல் பாதியும் சரி இரண்டாம் பாதியும் சரி திரைக்கதையில் அந்த அளவு விறுவிறுப்பு இல்லை என்றும் பலர் கூறினார்கள். இதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் வாடிவாசல் திரைப்படத்தைதான் எடுப்பதாக இருந்தது. ஆனால் அதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, சிம்புவுடன் கைகோர்த்தார் வெற்றிமாறன்.
இந்த திரைப்படம் வடசென்னை படத்தின் இரண்டாம் பாகம் என்று கூறப்பட்டது. இதற்கான அறிவிப்பை வீடியோவாக வெளியிட முடிவு செய்து அதற்கான சூட்டிங்கும் நடைபெற்றது. ஆனால் இந்த திரைப்படத்திற்கு தனுஷ் தடையாக இருப்பதாக தகவல்கள் வெளியாகின. வடசென்னை திரைப்படத்தை தனுஷே தயாரித்ததால், இதற்கு என் ஒ சி கொடுக்க அவர் 20 கோடி ரூபாய் கேட்பதாக சொல்லப்பட்டது.
இப்படியான சூழலில், அந்த சமயத்தில் என்ன நடந்தது என்ற உண்மையை விளக்கி இருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன். இது தொடர்பாக youtube சேனலில் பேசி இருக்கும் அவர், தாணு தயாரிப்பில் நான் சிம்புவுடன் அடுத்த திரைப்படத்தில் இணைய இருக்கிறேன். ஆனால் இது வட சென்னை திரைப்படத்தின் இரண்டாம் பாகம் அல்ல. அதேசமயம் இது வட சென்னை உலகில்தான் இருக்கும்.
இதனால் வட சென்னை படத்தில் இருந்த சில கதாபாத்திரங்கள், இங்கு வருவார்கள் என்பதால் அதன் தயாரிப்பாளரான தனுஷிடம் செல்பேசியில் இது குறித்து பேசினேன். உடனடியாக தனுஷ் உங்களுக்கு எது பிடிக்கிறதோ அதை தாராளமாக செய்யுங்கள் என்று கூறினார். அதுமட்டுமல்ல இதன் என்ஓசிக்காக அவர் எந்தத் தொகையும் என்னிடம் கேட்கவில்லை. நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறினார்.
ஆனால் இங்கு என்னை பற்றியும் தனுஷ் பற்றியும் ஒரு அவதூறான பேச்சுகள் எழுந்து வருகின்றன. எங்களைப் பற்றிய அவதூறான இந்த வியூகங்களை நாங்கள் விரும்பவில்லை. அண்மையில் கூட நான் நிதி நெருக்கடியில் சிக்கிய போது தனுஷ் தான் பேசி ஒரு தயாரிப்பாளிடமிருந்து அட்வான்ஸ் தொகை எனக்கு பெற்று கொடுத்தார் என்று குறிப்பிட்டுள்ளார். வெற்றிமாறனின் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.





