தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு பாதையை உருவாக்கி, அதில் ஏராளமான ரசிகர்களை சம்பாதித்தவர் இயக்குனர் வெற்றிமாறன். இயக்குனராக பொல்லாதவன் திரைப்படத்தில் தொடங்கிய அவரது பயணம், தற்போது விடுதலை திரைப்படம் வரை வெற்றிகரமாக தொடர்ந்து வருகிறது.
அவர் இயக்கிய திரைப்படங்களில் ஆடுகளம் மற்றும் அசுரன் ஆகிய படங்கள் தேசிய விருதை வென்றுள்ளன. தான் இயக்கும் ஒவ்வொரு திரைப்படத்திலும் ஒரு வித்தியாசத்தை காட்டும் வெற்றிமாறன், அதில் காட்சிக்கு காட்சி சுவாரசியப்படுத்தி திரையரங்குகளில் ரசிகர்களை கொண்டாட்ட களத்திற்கு கொண்டு செல்வார்.
தற்போது அவர் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார். முதலில் இந்த திரைப்படத்தை ஒரே பாகமாக தான் எடுக்க வெற்றி மாறன் திட்டமிட்டு இருந்தார். அதில், பாரதிராஜா மற்றும் சூரி ஆகியோர்தான் நடிக்க இருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் முழு கதையும் மாறியது.
விஜய் சேதுபதியை கொண்டு வந்து காட்சிகளை மாற்றிய வெற்றிமாறன் அதனை இரண்டு பாகங்களாக எடுக்க முடிவு செய்து பணியாற்றினார். இதில் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. தற்போது இரண்டாம் பாகத்திற்கான பணியும் சூடு பிடித்துள்ளது. அனேகமாக இதன் படபிடிப்பு ஜூன் மாதம் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்கத்தைத் தவிர தயாரிப்பு வேலைகளிலும் அவர் ஈடுபட்டு வருகிறார். தனது கிராஸ் ரூட் நிறுவனத்தின் மூலம் அவர் பட தயாரிப்பில் இறங்கி இருக்கிறார். காக்கா முட்டை, கொடி, சங்கத் தலைவன் உள்ளிட்ட திரைப்படங்களை அவர் தயாரித்திருக்கிறார்.
இப்படியான சூழலில் அவர் தற்போது விமல் படத்தை தயாரிப்பதாக அறிவித்துள்ளார். குணச்சித்திர நடிகர் போஸ் வெங்கட் இந்த திரைப்படத்தை இயக்குகிறார். இதற்கு ம பொ சி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மாங்கொலை பொன்னரசன் சிவஞானம் என்பதை சுருக்கி தான் படக்குழுவினர் இந்த டைட்டிலை வைத்துள்ளனர். படத்தின் பெயரை மிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் சூழலில், இதற்கான அடுத்தகட்ட அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





