இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜீத்குமார் நடிப்பில் உருவான படம் விடாமுயற்சி. கடந்த ஆண்டு அக்டோபர் 4ம் தேதி அஜர்பைஜானில் துவங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு, சமீபத்தில்தான் ஐதராபாத்தில் முடிவடைந்தது. எனினும் அஜீத்குமார், திரிஷா நடிக்க வேண்டிய பாடல் காட்சி ஒன்று மீதம் இருப்பதாகவும் கூறப்பட்டது.
கடந்த 2023ம் ஆண்டில் ஜனவரி மாதம் 14ம் தேதி துணிவு படம் வெளியான நிலையில் அதன்பிறகு 20 மாதங்களாக அஜீத்குமார் படம் எதுவும் ரிலீஸ் ஆகாத நிலையில் அவரது ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் இருந்து வருகின்றனர். விடாமுயற்சி படப்பிடிப்பு துவங்கி 11 மாதங்களாகியும் இன்னும் அந்த படம் திரைக்கு வராதது அஜீத் ரசிகர்களை அதிருப்தியடைய செய்திருக்கிறது.
இதற்கிடையே வருகிற அக்டோபர் 31ம் தேதி, தீபாவளி பண்டிகைக்கு விடாமுயற்சி படம் ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டு வரும் நிலையில், அதுவும் நிசசயம் இல்லை என்ற தகவலே பரவி வருகிறது. ஏனெனில் இன்னும் விடாமுயற்சி டப்பிங் பணிகள் ஆரம்பிக்கவில்லை. பாடல் காட்சியும் மீதம் இருப்பதே இந்த குழப்பத்துக்கு காரணமாக உள்ளது.
ஆனால் அதிரடி ஆக்சன் படமான விடாமுயற்சி படத்தில் வசனக் காட்சிகள் மிகவும் குறைவு என்பதால் டப்பிங் பணிகள் சில நாட்களில் முடித்து விடலாம் என்று கூறப்படுகிறது. மேலும் வருகிற அக்டோபர் 3ம் தேதி முதல் 7ம் தேதி வரை 5 நாட்கள், திரிஷா தேதி ஒதுக்கி தந்துள்ளதால் அந்த நாட்களில் அஜீத்குமார், திரிஷா பாடல் காட்சி படமாக்கப்பட உள்ளது.
இதுவரை எடுக்கப்பட்ட படக்காட்சிகள் அனைத்தும் எடிட் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளதால், அந்த ஒரு பாடல் காட்சியை எடுத்து முடித்த பின் அந்த காட்சியை மட்டும் இணைத்துவிட்டால் விடாமுயற்சி படம் ரிலீஸ்க்கு தயாராகி விடும் என்று இயக்குனர் மகிழ்திருமேனி தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதனால் வருகிற 31ம் தேதி, விடாமுயற்சி தீபாவளி ரிலீஸ் ஆகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று தெரிய வந்துள்ளது.
விடாமுயற்சி படம் வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் ஆவதால் அன்று ரிலீஸ் ஆக திட்டமிட்டுள்ள நடிகர் சிவகார்த்திகேயனின் அமரன் படம் ரிலீஸ் தள்ளிப் போகும் என்று கூறப்படுகிறது. ஏனெனில் அஜீத்குமார் படம் வரும்போது, சிவகார்த்திகேயன் படம் எதிர்பார்த்த வசூலை பெற வாய்ப்பில்லை என்ற நிலையில், அமரன் படத்தை தீபாவளி கழித்தே ரிலீஸ் செய்வார்கள் என்றும் கூறப்படுகிறது.





