கடந்த சில ஆண்டுகளாகவே அஜித்திற்கு ஒரு திரைப்படம் விரைவாக ரிலீஸ் ஆவது என்பது கானல் நீராக மாறிக் கொண்டிருக்கிறது. இதற்கு முன்பு வலிமை திரைப்படத்தில் நடந்ததை இதற்கு உதாரணமாக கூறலாம். அஜித் வினோத் கூட்டணியில் உருவான இந்த திரைப்படத்தின் பணிகள் கொரோனா காலத்தால் தடைபட்டது.
இதனால், தான் எடுக்க வந்த கதையை மாற்றி அமைத்து, அதில் பல்வேறு கதாபாத்திரங்களை உள்ளே புகுத்தி காட்சிப்படுத்தி வந்தார் இயக்குனர் வினோத். தொடர்ந்து சூட்டிங் பணிகளும் நடத்தி வந்தாலும், அது குறித்த எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவே இல்லை.
அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்தது என்னவோ, படத்தின் தற்போதைய சூழல் என்ன என்பதை அறிவதற்காக தான். ஆனால் அதைக் கூட செய்யாமல் இழுத்தடித்தது தயாரிப்பு நிறுவனம் தரப்பு. இணையத்தில் கேள்வி எழுப்ப ஆரம்பித்த அஜித் ரசிகர்கள், பிறகு தாங்கள் செல்லும் ஒவ்வொரு இடத்திலும் அதே கேள்வியை முன்னிலைப்படுத்தினர்.
ஒருமுறை கிரிக்கெட் நடந்து கொண்டிருக்கும்போது சுழற் பந்துவீச்சாளர் அஸ்வினிடமும் இதே கேள்வியை கேட்டனர். இதனால் வலிமை அப்டேட் என்ற வார்த்தையே மிகப் பெரிய அளவில் ட்ரெண்ட் ஆகிவிட்டது. ஆனால் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இருந்து கிடைத்த பதில் என்னவோ நோ மட்டும் தான். இதனால் ஒரு கட்டத்திற்கு மேல் அஜித் ரசிகர்கள் அப்செட்டானார்கள்.
படமும் வெளிவந்து தோல்வியை தழுவியது. இப்படியான சூழலில்தான் தற்போது விடாமுயற்சி திரைப்படத்திற்கும் ஏற்பட்டிருக்கிறது. கடந்தாண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய இதன் படப்பிடிப்பு, அண்மையில் தான் நிறைவடைந்தது. மகிழ் திருமேனி இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தில், திரிஷா அர்ஜுன் ஆரவ் ரெஜினா நிகில் நாயர் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.
அண்மையில் இதற்கான டப்பிங் பணிகள் தொடங்கின. இந்த நிலையில் விடாமுயற்சி படத்தின் டீசர் நவம்பர் 10ஆம் தேதி வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. டீசரின்போது படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பும் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. லைக்கா நிறுவனம் தயாரித்திருக்கும் விடாமுயற்சி திரைப்படம் அனேகமாக பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.





